பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

334


மறவாதீர்கள் - பெரியார் பேசுகிறார்-சட்ட மன்றத் தொகுதியில் இன்னாரையும் நாடாளுமன்றத் தொகுதியில் இன்னாரையும் ஆதரியுங்கள் (காமராசரின் வேட்பாளர்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?) என்றெல்லாம் பெரியாரின் தலையங்கப் பகுதிக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும், செய்திச் சித்திரங்களும் வாக்காளரை ஊக்கப்படுத்தி வந்தன.

இவ்வளவு கடுமையான தேர்தல் பிரச்சார உழைப்பினால் பெரியாரின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. 22.2.62 அன்று திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்னைப் பொது மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு இடநெருக்கடி காரணமாகப் பழமைபோல் சுந்தரவதனம் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். அடுத்து 4, 5 நாட்களுக்குக் கூட்டங்களுக்குச் செல்லாமல் ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வற்புறுத்தினர். பின்னரும் முழு ஓய்வு தேவையெனப் பொது மருத்துவமனையிலேயே 2.3.62 முதல் தங்கினார் பெரியார். இடையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அதிர்ச்சி தரத்தக்க, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில், அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். ஆயினும், நிறுத்தப்பட்ட 142 பேரில் 56 பேர் வெற்றி பெற்று, தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சியாயிற்று. நாடாளுமன்றத்துக்கு நிறுத்தப்பட்ட 18 பேரில் 7 பேர் தி.மு.க. வேட்பாளர் வென்றனர். காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றதாயினும், 154 என்ற எண்ணிக்கை சட்ட மன்றத்தில் 138 எனக் குறைந்து விட்டது. இருப்பினும் வடநாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற செய்தி, “விடுதலை”யில் முதல் பக்கப் பெருஞ் செய்தியாக, வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. மண்ணைக் கவ்விய கண்ணீர்த்துளிகள் பட்டியலும் வழக்கம் போலவே பிரசுரிக்கப்பெற்றது. ம.பொ.சி. - திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியல்ல; எதிரிக் கட்சிதான் - என்றே வியாக்கியானம் செய்தார்.

பெரியார் மருத்துவமனையில் இருந்த வண்ணம், காங்கிரசின் வீழ்ச்சி பற்றிய சர்வே, நடத்தி, காங்கிரசுக்காரர்களில் ஒரு சிலரின் சிரத்தையின்மை, பகிரங்கமான துரோகம் இவை பற்றி வெளிப்படுத்தி வந்தார். “நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் வாழ்வுக் கட்சிகள் எல்லாமே தோல்வியடைந்துள்ளன. காரணம் காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஆணவமும் அகம் பாவமும் மிகுந்து விட்டது. என் நிலையும் அப்படித்தான். இந்தத் தோல்விகளால் ஆச்சாரியாருக்கு மட்டுந்தான் ஒன்றும் நாட்டமில்லை. காரணம் அவருக்குக் கேபிடல் எதுவுமே கிடையாது -" என்று விவரித்தார் பெரியார். கண்ணீர்த்துளிகள் வெற்றி பெற்ற இடங்களில் தவறான முறைகளைக் கையாண்டதாகவும், சினிமா மோகத்தைப்