பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சமிக்ஞையாகத் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாகவும், எனினும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே நிலையாக இருந்து வருவதாகவும், பிரகடனம் செய்தார். 9.12.62, 7.1.63 ஆகிய நாட்களில் சீனப் போர் பற்றி வானொலியில் உரையாற்றினார். 2.12.62 அன்று போர் நிதிக்காக ரூ.35,000 திரட்டி உதவினார் அண்ணா .

பெருமனம் படைத்த பெரியாரும் 15.11.62 அன்று அறிக்கையில், போர் முயற்சிக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்திட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மேலும் திருச்சியிலுள்ள தமது கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.2000/- போர் நிதியாகத் திருச்சியில் காமராசரிடம் வழங்கச் செய்தார்.

“ஆங்கிலம் ஓர் இணை மொழியாக நீடித்து இருக்கும். இந்தி மொழி புழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும் வரை, ஆங்கில மொழியை அகற்ற மாட்டேன்”. நேரு உறுதி மொழி - என்ற தலைப்பில், பிரமரின் படத்துடன், மேற்கண்ட வாசகம் 11.11.62 “விடுதலை" தாளேட்டில் வந்தது போலவே, எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரமாக இந்திய யூனியன் சர்க்காரால் வெளியிடப்பட்டது. போர் மேகம் சூழ்ந்திருந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு இந்த வாக்குறுதி ஒரு பேரொளியாய் வழி காட்டியது. இன்றளவும் இதைத் தான் இந்தி எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டி, இதனை ஏன் சட்டமாக்கக்கூடாது எனக் கேட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அண்ணாமலைப் பல்கலை கழகத் துணைவேந்தராக சர் சி.பி. ராமசாமி அய்யர் நியமனம் பெற்றார் 14.11.62 அன்று,

' பெரியார், தமது 84ஆவது பிறந்த நாள் விழா பெரியார் திடலில் கொண்டாடப்பட்டபோது, நடிகவேள் ராதா அளித்த 10,000 ரூபாய் நன்கொடையைப் பெற்றுக் கொண்டாரல்லவா? அப்போதே வாக்களித்தவாறு - ராதா பெயரில் அங்கே ஒரு மன்றம் - ஹால் - கட்டப்படும்; அரங்கு அமைக்கப்படும். அதற்கு ராதா மன்றம் என்றே பெயர் சூட்டப்படும் என்றெல்லாம் கூறியவாறு - 18.11.62 அன்று பெரியார் தலைமையில், திரைப்பட அதிபர் பி.ஏ, பெருமாள் மன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார். ராஜாஜி சீனப் போர் குறித்துத் தாறுமாறான கருத்துகள் கூறுவதைக் கண்டித்து, அவருக்குப் பரம்பரைப் புத்தி, காட்டிக் கொடுப்பது போகுமா? - என்று எழுதினார் பெரியார். பார்ப்பான் புத்தி பார்ப்பனீயம்தான்; இன்றைய வடக்கெல்லை நெருக்கடிதான் எப்படி? என்ற தலைப்புகளிலும், சீனப்போர் குறித்து, நவம்பர் இறுதி வாரத்தில், “விடுதலை” தலையங்கப் பகுதியில் எழுதி வந்த பெரியார், இருவாரங்களுக்குத் தமது சுற்றுப் பயணத்திற்கும் சிறிது ஓய்வளித்திருந்தார்.