பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

348


எனத் தாடி கூட வளர்த்தார் குருசாமி. இவரைப் போன்றே இன்னொருவரும் உட்பகையாய் இருந்திருக்கிறார். இவர் மணியம்மையைக் கண்டு பொறாமையால் புழுங்கியிருக்கிறார். இவர்தான் திருச்சி ப்ளீடர் தி.பொ. வேதாசலம், இவர்கள் இருவருமே இன்கம்டாக்ஸ் துறைக்குக் கடிதம் எழுதிப் பெரியாரின் சொத்துக்களுக்கு வரி விதிக்கச் சொன்னார்களாம்! 29.1.63 “விடுதலை“மீண்டும் ஒரு துரோகத்தை வெளிப்படுத்திற்று. அதில் பெரியாரின் குறிப்பு கூறுகிறது - வேதாசலம்: 2, 3 ஆண்டுகட்கு முன்பே விலக்கப்பட்டார். போனால் போகிறதென்று கழக நிகழ்ச்சிகளில் பேச்சாளராக அனுமதித்து வந்தேன் என்று, பெரியாரின் பெருந்தன்மைக்குச் சரியான எடுத்துக் காட்டாகவும், வேதாசலத்தை அவர் எந்த அளவு மதித்து வந்தார் என்பதைக் காண்பிக்கவும், அதே தேதியில் தி.பொ. வேதாசலனார் பெரியாருக்கு வரைந்த கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் பின்னுமொரு பெருஞ்சிறப்பு, அன்றைய ”விடுதலை" பெரியார் கிழித்த கோட்டைத் தாண்டாத நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள், துரோகிகளைப் பற்றித் தீட்டிய முடங்கலும் வெளியாகி இருக்கிறது.

7.2.63 அன்று பண்ணுருட்டியில் பெரியார் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில் துரோகிகள் முளைப்பது புதிதல்ல. அவ்வப்போது நானும் வெட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அண்ணாதுரை போகும்போது அய்யாவிடம் 5 லட்சம் சொத்தை விட்டுப் போகிறோம் என்றார். குருசாமி போகும்போது அய்யோ 30 லட்சம் சொத்தைப் பெரியார் வைத்துக் கொண்டிருக்கிறாரே என்றார். 13 வருடத்தில் 5 என்பது 30 ஆனது என் சாமர்த்தியம் தானே? முப்பது லட்சம் சரியல்ல, 15 லட்சம் என்றாலும் அதில் இவருக்கு என்ன கஷ்டம்?" என்று கேட்டார் பெரியார்.

ஆங்காங்கு தாமே நேரில் இருந்து மாவட்டத் தோழர்களை வரச்செய்து கழக அமைப்புகளைத் திருத்தியமைத்துப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப் பெரியார் விரும்பினார். முதல் கட்டமாகத் தென்னார்க்காடு மாவட்டக் கழகக் கூட்டம் 10.2.63 அன்று விழுப்புரத்தில் பெரியார் முன்னிலையில் கூடித், தலைவராக கு.கிருட்ணசாமி, துணைத் தலைவர்களாகப் பண்ணுருட்டி நடேசன், திண்டிவனம் ஜெயராமன், செயலாளர்களாகப் புவனகிரி சச்சிதானந்தம், நெல்லிக்குப்பம் சுப்ரமணியம், பொருளாளராக கோ. சாமிதுரை ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது.

தென்னார்காடு மாவட்டம் கல்லக்குறிச்சியைச் சார்ந்த கோ.சாமிதுரை எம்.ஏ. பி.எல்., பட்டம் பெற்று வழக்கறிஞராகி மாவட்ட அளவில் கழகப் பணியாற்றி வந்தவர். அமைதியாகவும் அடக்கமாகவும் பெரியார் வழி நடந்து