பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இன்று திராவிடக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக ஆற்றலுடன் விளங்கி வருகின்றார், மாநில அளவில்,

பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்த்து 25.1.63 அன்று மாநிலங்களவையில் அண்ணா பேசினார். பின்னர் ஒரு முறை ‘உங்கள் பிரிவினைத் தடைச் சட்டம், தேர்தலில் ஈடுபடுவதால் எங்களைத் தடுக்கலாம். ஆனால் தேர்தலில் நிற்காத திராவிடர் கழகத்தை உங்கள் பிரிவினைத் தடைச் சட்டம் என்ன செய்ய முடியும்?’ என்று அண்ணா கேட்டதை 21.2.63 “விடுதலை” பிரசுரித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.எஸ். ராமமூர்த்தி என்ற பார்ப்பன வழக்கறிஞர் நேரடி நியமனம் பெற்றதைக் கண்டித்து 19.2.63 “விடுதலை” ஐகோர்ட்டில் பார்ப்பன ஆக்கிரமிப்பு என்ற மகுடத்தின் கீழ் தலையங்கம் தீட்டியிருந்தது. 20ந் தேதி பெரியாரே எழுதியிருந்தார், பீடிக்கு வரி விதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு யோசனை தெரிவித்து, பெண்ணாடத்தில் ஒரு திருமண விழாவில் பேசும்போது பெரியார், எங்கள் சுய மரியாதைப் பிரச்சாரத்தின் விளைவுதானே இருதார மணத்தடைச் சட்டம் வந்தது? என்று கேட்டார். மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி, உத்தியோக உரிமை ஆகியவை பெருகியதும் எங்களால் தானே? என்று கேட்டார் பெரியார்.

இந்தியக் குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 28.2.63 இரவு 10.30 மணிக்குக் காலமானார். பெரியார் திருச்சியிலும் தஞ்சையிலும், குருசாமி, வேதாசலம் ஆகிய இருவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தாம் இவர்களுக்கு மரியாதை காரணமாக நீண்ட தவணை தந்து விட்டதாகவும், இவர்களைவிட அண்ணாத்துரை நூறு மடங்கு யோக்கியர் என்றும், மிக்க வேதனை கலந்த வருத்தத்துடன் உண்மைகளை ஒளிவிடச் செய்ய நேர்ந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில், இவர்களை விட அண்ணாத்துரை ஆயிரம் மடங்குமேல் என்றே பெரியார் பேசி இருக்கிறார்.

ஆண்டுதோறும் சென்னை எழும்பூரில் நடைபெறும் கைத்தறிக் கண்காட்சியில், இந்த ஆண்டு, சட்டசபை சபாநாயகர் எஸ். செல்ல பாண்டியன் தலைமையில் 11.3.63 அன்று பெரியார் பேசினார். 13ந் தேதி “விடுதலை” ஒழுங்கீனமான நடத்தைக்குத் தண்டனை என்ற மகுடத்தின் கீழ், தலையங்கக் கட்டுரையைப் பெரியார் எழுதி, சட்ட மன்றங்களில் வெளி நடப்புச் செய்வது தவறு, தேவையற்றது என்று கண்டித்தார். மற்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை வன்மையாக எதிர்த்தார். இதனால் ஒரு பத்தாயிரம் இருபதாயிரம் பேரைச் சிறையில் தள்ளிட, டெல்லி திட்டமிடுகிறதா? நானும் விரைவில் பிரிவினைத் தடுப்புச் சட்ட மறுப்பு மாநாடு கூட்டப் போகிறேன் என்று முடித்திருந்தார் பெரியார். பிரிவினை உணர்ச்சியைச் சட்டத்தால் தடுத்துவிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, முந்தின நாள் சென்னை