பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

350


திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பெரியார் முழக்கமிட்டார். சென்னைப் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வர்த்தகர் அண்ணாமலை கவுண்டரையும், கழகத் தோழர் மயிலை சம்பந்தனையும் பெரியாரும் மணியம்மையாரும் 12ந் தேதியன்று மாலையில் கண்டு, விசாரித்து வந்தனர்.

காமராசர் ஆட்சியே தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு பெட்டிச் செய்தி. இதில் கல்வித் துறையின் சாதனைகள் - அதாவது எஸ். எஸ். எல்.சி. வரையில் இலவசக்கல்வி, மதிய உணவு, படிப்போர் எண்ணிக்கை பெருகியுள்ளது. 15% இப்போது 37% ஆகியிருக்கிறது. ஆரம்பக்கல்வி கட்டாயமாகியுள்ளது. கல்விக்கான பட்ஜெட் 1946-47ல் 6.59 கோடி 1963-64ல் 28.71 கோடி என்பன போன்ற புள்ளி விவரங்கள், பிற எழுச்சியூட்டும் செய்திகள், சாதனைகள் ஆகியவை நாள்தோறும் வேறு வேறாக"விடுதலை" ஏட்டில் 1963 மார்ச் 15 முதல் வெளியிடப்பட்டன. அதேபோல், ஆச்சாரியாரும் அவர் கும்பலும் ஆட்சிக்கு வந்தால், என்ற தலைப்பின் கீழ் இன்னொரு பெட்டிச் செய்தியில் - ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம், ஆரம்பப்பள்ளிகளை மூடியது, தொழில் கல்லூரிகளில் பார்ப்பனர்க்கே சலுகையளித்தது போன்ற விவரங்கள் தரப்பட்டு வந்தன. இன்னொரு புறத்தில், ராமநவமியை ஒட்டி, ராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதையைப் பெரியாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து விளக்கி வந்தன. ஏழெட்டு ஆண்டுகளாய் இயங்காமலிருந்த திராவிட மாணவர் பிரச்சாரப் பயிற்சி நிலையம் இந்த ஆண்டு துவங்கும் எனப் பெரியார் அறிவித்தார்.

கந்த புராணத்தையும் இராமாயணத்தையும் பெரியார் ஒப்பிட்டு, ஆரியர்கள் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்த போது, இங்கே ஆரிய நாகரிகம் பரவாமல் தடுத்த திராவிட வீரர்களைப் போரிட்டு வென்றதாக முதலில் எழுதப்பட்ட சிவபரமான நூல் ஸ்கந்த புராணம் என்பது; பின்னர் வைணவபரமான நூலாக அதிலுள்ள சம்பவங்கள் - பாத்திரங்களைப் பேரும் இடமும் மாற்றி இராமாயணம் எழுதப்பட்டது. அதன் பிறகு புராணமாக எழுத இடமில்லாததால், இராமாயணம் - பாரதம் எல்லாம் இதிகாசம் என்று கூறி விட்டனர். இவையெல்லாம் ஏதோ உண்மையில் நடந்ததாகக் கற்பனை செய்து கொண்டனர் தமிழ்ப் புலவர்கள். முதலில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் பூசாரி கந்த புராணம் எழுதினார். தமிழ் மக்கள் மூடத்தனத்தால், எல்லாம் மெய்யாகவே நடந்த கதை என்று, மோசம் போனார்கள். .

பெரியாரின் இந்த ஆராய்ச்சி ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும். அடுத்தபடியாகத் தமிழ் நாட்டில் ஐந்து சட்ட மன்றத் தொகுதிகள்