பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காலியாகியிருந்தன. அவற்றுள் இரண்டு, வழக்குகளில் உட்பட்டிருந்தன. மிகுதியான மூன்றுக்கும் இடைத்தேர்தல்களுக்கான தேதிகள் குறிப்பிடப்பட்டன. தமிழர்களுக்கு இது சோதனைக்காலம் என்று சுட்டிக் காட்டிய பெரியார், இடைத்தேர்தல்கள் மூன்றிலும் காமராசர் நிறுத்தும் காங்கிரஸ் வேட்பாளரையே தமிழ் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்; உங்களுக்குக் காமராசரின் மனித தர்மம் வேண்டுமா? ஆச்சாரியாரின் மனுதர்மம் வேண்டுமா? என்று கேட்டார். தங்கக் கட்டுப்பாடு சட்டத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொற்கொல்லர் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டாமா? என்று காமராசரும் மாயூரத்தில் 17.4.63ல் “விடுதலை" கேட்டதையும், முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. சாதி ஒழிய வேண்டுமா? நீடிக்க வேண்டுமா? சாதி ஒழிய வேண்டு மென்று காமராசர் ஆட்சியும் அதை ஆதரிக்கும் திராவிடர் கழகமும் பாடுபடுகின்றன. சாதி நீடிக்க வேண்டுமென்று சுதந்திரா, கண்ணீர்த் துளி, நாம் தமிழர், தமிழரசு, கம்யூனிஸ்டு, சோஷலிஸ்டுக் கட்சிகள் கோருகின்றன. இராமன் ஆண்டால் நல்லதா? இராவணன் ஆண்டால் நல்லதா? - இப்படியெல்லாம் பளிச்சிடும் விளம்பர முறைகளை "விடுதலை" கையாண்டது! நான்கூனேரி, போடிநாயக்கனூர், திருவண்ணாமலை என்னும் வரிசைப்படி, நிரலாக இடைத் தேர்தல்கள் நடைபெற இருந்தன; முறையே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகச் சுதந்திரா, சுயேச்சை, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இம்மூன்று தொகுதிகளிலும்.

முன்னர் அறிவித்தவாறு பெரியார் நேரிலிருந்து தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டியைத் திருத்தி அமைத்தார். அரியலூரை அடுத்த அயன் ஆத்தூர் என்ற சிற்றூரில் 20.4.63 அன்று சாதி ஒழிப்பு வீரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, உடல் புல்லிக்க, உள்ளம் பெருமிதமடையச் சிறப்புடன் நடைபெற்றது. தேசப்பட எரிப்புப் போரில் குதித்து இரண்டாண்டு தண்டனைகளை அனுபவித்து, மீண்டவர் ஒருவர், 1½ ஆண்டு ஏழு பேர், 9 மாதம் பன்னிரண்டு பேர், மைனர் சிறையிலிருந்தவர் 4 பேர் பெரம்பலூரை அடுத்த கூடலூரில், பெரியாரின் எடைக்குச் சமமாக மிளகாய் வழங்கப்பட்டது. 21ந் தேதி சிதம்பரம் வட்ட சாதி ஒழிப்பு மாநாடும், திராவிடர் கழக மாநாடும் வல்லம்படுகையில் நடைபெற்றன. முன்னதை கி. வீரமணி தலைமையில் சேலம் ச.திரு. அழகரசன் திறந்து வைத்தார். பின்னதை பெரியார் தலைமையில் ஆர்.சண்முகநாதன் திறந்து வைத்தார். இந்த மாநாட்டில் மீதமான பணத்தைக் கொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்திற்கு அங்கேயே ஒரு மனைக்கட்டு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

நேருவின் வாக்குறுதி இந்திப் பிரச்சினையில் தகர்க்கப்பட்டுவிட்டது எனக் கூறி, சம்பத், அரசியல் சட்டத்துக்குத் தீயிடும்