பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தலைவர் டி.எம். சண்முகம் தலைமை ஏற்றார். திராவிட முன்னேற்றக் கழக மேயர், துணைமேயர்களாக குசேலரும், வேதாசலமும் வரவேற்றனர்.


7.8 இரு நாட்களும் பெரியார் போடித் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். காமராசர் ஆட்சி நீடித்தால் தமிழர்கள் நூற்றுக்கு நூறு பேரும் படித்து விடலாம் என்று உறுதி தெரிவித்தார். நாங்குநேரியிலும், போடியிலும் காங்கிரஸ் வேட்பாளரே வென்றனர். பெரியாரும் அளவிலா ஆனந்தமுற்றார். முந்திய திங்கள் 27ம் நாள் திருத்துறைப் பூண்டியில் பேசிய பெரியார், ஓட்டளிக்கும்போது மக்கள் நலத்துக்குக் கேடானவர் வந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்; நேரு, காமராசர் கரத்தைப் பலப்படுத்துங்கள் என்றார்.


90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற பெரியார் ராமசாமி. இந்த வயதிலும் ஓயாது போராடுகிறார். அடுத்த கிளர்ச்சி என்ன என்று துடிக்கிறார். அறிவிக்கும் வரையில் அடுத்த போராட்டம் எதை எதிர்த்து என்பதை அவரே அறிவாரோ என்னவோ -என்பதாக "பிளிட்ஸ்" இதழ் 8.6.63 அன்று பாராட்டி எழுதியது. பள்ளிகள், கல்லூரிகளில் விண்ணப்பம் போடும்போது சாதிப் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று தமிழக அரசு தரப்பில் ஒரு செய்தி வெளியான போது, உண்மையில் அப்படிக் கோரப்பட்டால், மீண்டும் பிராமணர் ஓட்டல் பெயரழிப்புப்போர் துவக்க நேரிடும் என்று "விடுதலை" எச்சரித்தது. இந்த ஏற்பாடு சாதியை ஒழிக்காது; மறைமுகமாகப் பார்ப்பனரை உயர்த்தி விடும் என்பது புரிந்தது.


ஈ.வெ.கி. சம்பத் திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்திற்குக் காங்கிரஸ் ஆதரவாளராகப் பேசச் சென்றார். பெரியாரும் 24 முதல் 27 வரை தொகுதியில் பேசினார்: - காமராசரால்தான் தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது: இனியும் ஏற்படும். ஆச்சாரியாரின் அடிவருடிகளான கண்ணீர்த்துளிகளால் என்ன சாதிக்க முடியுமெனப் பெரியார் கேட்டார். எனினும் திருவண்ணாமலைத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ப.உ. சண்முகம் வென்றார். பின்னர், பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 1.7.63 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் பற்றிக் குறிப்பிட்டார். "நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர். என்று கூவிக்கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர்கூட மீதி இல்லை, அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று தெரிந்ததும், எல்லாருமே திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டேன்" என்று, மக்கள் மனோநிலையைச் சுட்டிக் காட்டினார் பெரியார்.