பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



மைசூர் மாநில அரசு 100க்கு 50 இடம் பிற்படுத்தப்பட்டோருக்கு என முன்னர் அறிவித்தது போக, இந்த ஆண்டில் கல்லூரிகளில் 100க்கு 23 இடம், குறைந்த மார்க் வாங்கியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது. வர்ணாசிரம தர்மக் காவலனான "சுதேமித்திரன்” ஏடு இந்த ஏற்பாட்டைப் பாராட்டி எழுதியதைப் படித்ததும், பெரியாருக்கு ஆச்சரியம் ஆச்சரியம் அதிசயம் அதிசயம்!" என்று தலைப்பிட்டு 27.6.63ல் தலையங்கம் தீட்டியுள்ளார். தஞ்சை திராவிடர் கழகத் தலைவர் கோ. ஆளவந்தார் 7.7.63 அன்று இயற்கை எய்தினார். திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணெய் நல்லூரில் சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகளில் கலந்து கொண்டிருந்த பெரியார் விரைந்து தஞ்சை வந்து, மறுநாள் மாலை 3 மணியளவில் அன்னாரின் சடலத்துக்கு மாலை சூட்டி மரியாதை தெரிவித்தார். தஞ்சை திராவிடர் கழகக் கட்டடம் பெரிதாக்கப்பட நிதி தேவை என்று பெரியாரே "விடுதலை"யில் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிதிக்குழுவில் இடம்பெற்ற தஞ்சை வர்த்தகர் கா.மா. குப்புசாமி, சுற்றத்தாருடன் கழகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், பின்னர் மாவட்ட அளவில் தனது தொண்டினை விரிவு படுத்தியவர். இப்போது மத்திய திராவிடர் கழகப் பொருளாளராக அரும் பணியாற்றி வருபவர். பொதுச் செயலாளருடன் கீழ்த்திசை நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.

பார்ப்பானுக்கே பதவி கொடுத்து நன்மை செய்து வந்த காங்கிரஸ், இப்போது தமிழர் கைக்கு மாறி, தமிழர்களுக்கு நன்மை செய்து வருகிறது. இதை எதிர்க்கின்ற பார்ப்பனருக்குக் கண்ணீர்த் துளிகள் துணை போவதா? இது இனத்துரோகமல்லவா? என்று பெரியார் அடியக்கமங்கலத்தில் வினா தொடுத்தார்.

இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் பன்னாடை முறையில்லை, யாரும் நிறுத்தப்பட்டமாட்டார்கள் என்று சென்னை சட்ட மன்றத்தில் 8.8.63 அன்று மகிழ்வான செய்தி அறிவிக்கப்பட்டது அரசினரால்.

ஈரோடு பொதுக் கூட்டத்திலும், திருச்சியையடுத்த பொன்மனைப்பட்டி தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் கூட்டத்திலும் கலந்து கொண்டு சென்னை வந்து சேர்ந்த பெரியாருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று காத்திருந்தது. “கே.பிளான்” என்றழைக்கப்பட்ட காமராசர் திட்டம் என்ற ஏற்பாட்டின்படிக் காங்கிரஸ் கட்சியின் முதிய தலைவர்கள் பதவி விலகுதல் என்பதாகும் அது. காமராசரைப் பதவியிலிருந்து இறக்கிடவே முக்கியமாய் இது அறிவிக்கப்பட்டதாக, அப்போது சில அரசியல் நோக்கர்கள் கருதினர். பெரியார் இதைக் கேள்வியுற்றதும் காமராசருக்கு ஒரு தந்தி அனுப்பினார்.