பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மக்களிலும் 100க்கு 99பேர் மூடநம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப் பட்டவர்கள், நமது திட்டங்கள் தங்கள் சுயநலத்திற்குக் கேடு என்பதாகவே கருதி, நம் மீது வெறுப்பு கொள்கிறார்கள், மருந்து சாப்பிடுவதற்குக் குழந்தைகள் எதிர்புக்காட்டுவது போன்றதாகவே இந்த எதிர்ப்பை, வெறுப்பை நான் கருதி இலட்சியம் செய்யாமல் தொண்டாற்றி வருகிறேன். வீணாகிவிட்டன என்று சொல்ல முடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் உள்ளான நமது சமுதாயமும் நல்ல வண்ணம் முன்னேறி வருகின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்ட நமது சமுதாயம் கல்லி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலியவற்றில் எண்ணிக்கைக்கு ஏற்ற, விகிதாச்சாரம் அடைய வேண்டும் என்கிற இலட்சியத்தைப் பெறும்படியான பணியை இந்த 85-ஆம் ஆண்டு வேலைத் திட்டமாகக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டு இருந்தேன், பார்ப்பான் தன்னுடைய அழிவுக்கே இதன் வெற்றி காரணமாகிவிடும் என்று புரிந்து கொண்டு, தன்னுடைய எல்லாவற்றையுமே செலவழித்து, இதை நிறைவேற விடாமல் செய்வான் என்பதும் தெரியுமாதலால், இது மிகக் கடினமான வேலைத் திட்டம் என்றும் கருதினேன்.

இப்போது பார்ப்பானுக்குப் புதிய பலமும் சேர்ந்து கொண்டது. அது என்னவென்றால் பார்ப்பானைப் போலவே நம் நாட்டு மைனாரிட்டிகளான முஸ்லீம்களையும், கிறிஸ்துவர்களையும் இப்போது பார்ப்பான் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ஆச்சாரியார் முஸ்லீம்களை மயக்கிடவே, காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். நேருவின் சோஷலிசக் கொள்கை, இஸ்லாம் கிறிஸ்துவ சமுதாயத்தினர்க்குக் கேடு தரும் என்று புரஸ் கிளப்பி, அந்தக் கிறிஸ்துவர்களையும் இணைத்துக் கொண்டார். இந்த முக்கூட்டுக் குழுவினரும் தாங்களே எதிலும் வெற்றியடைய முடியாது எனக் கண்டு, தங்கள் சுயநலத்துக்காக, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ முடிவு செய்து, ஆச்சாரியாரை அண்டியிருக்கும் கண்ணீர்த் துளிகளை ஆதரித்துத்தான் காமராசரைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று சதித் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முஸ்லீம் - கிறிஸ்துவ சமுதாயத்துக்குத் தனித்தொகுதி கொடுத்து ஒதுக்கிவிட்டால் பெரும் அளவிற்கு அவர்கள் தொல்லை ஒழியும். அத்தோடு கூடவே, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் தமிழர், பார்ப்பனர், முஸ்லீம், கிறிஸ்துவர் என்கிற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திலுள்ள எல்லாத் துறைகளிலும் பிரித்துவிட்டால் தமிழ் நாட்டை, தமிழ் மக்களைப் பிடித்த எல்லாக் கேடுகளும் ஒழிந்தே போகும்.