பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

357



முதலாவதாக, நம்நாட்டு ஆட்சியில் நாம் அடைய வேண்டிய வகுப்பு உரிமைக் கிளர்ச்சி செய்வதை உடனடித் திட்டமாய்க் கொண்டிருக்கிறேன். நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஊழல் பெருகி விட்டதாகவும், கண்ணீர்த்துளி உறுப்பினர்கள் சொத்துச் சேர்த்து விட்டதாகவும், 'லிங்க்' இதழில் செய்தி வந்திருப்பதாக விடுதலை 20.9.63 அன்று குறிப்பிட்டுக் காட்டியது. ஞானசூரியன் என்ற பகுத்தறிவு நூலாசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி 23.9.63 அபுரோடு என்ற இடத்தில் காலமானார். 1963 செப்டம்பர் 24-ஆம் நாள் தமிழ் நாடு சட்டமன்றக் காங்கிரசின் தலைவராக மீஞ்சூர் பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி பார்வையாளராக அனுப்பப்பட்டிருந்தார். “வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்” என்று, அவர் முதல்வரானதை ஏற்றுக் கொண்டு,"விடுதலை" தலையங்கம் தீட்டியது. தஞ்சையில் தந்தை பெரியாரின் 85ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 5.10.63 அன்று பெரியாருக்கு 85 பொருட்கள், வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுமாறு வழங்கி, மகிழ்ச்சி கொண்டாடினர். சென்னை மாநகராட்சியினரால் அமைக்கப்பட்ட காமராசரின் முழு உருவச்சிலையைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 9.10.69 அன்று திறந்து வைத்தார்கள். தி.மு.க. ஆட்சியில் இது நடைபெற்றது. ஒரு சிறப்பு!

மேலும், உயிரோடிருக்கும் யாருடைய சிலையையும் பிரதமர் அதுவரை திறந்ததில்லை ; காமராசருக்குத் தனிச் சலுகைபோல வந்து நிறைவேற்றினர் என்பதும் சிறப்பிலும் சிறப்பு. காமராசர் அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டம் சூட்டப்பட்டதற்கிணங்க, அவர் பின்னாளில் அம்மாதிரிச் செயல்களில் ஈடுபட நேர்ந்தது. காமராசர்; நாடெங்கும் கிருபானந்தவாரியாரின் கதாகாலட்சேபம் நடைபெற்றால் நல்லதென்று கருத்துத் தெரிவித்தார். 18.12.63 அன்று சென்னை தேனாம்பேட்டையில் பேசிய பெரியார், “காமராசருக்குப் புத்தி கெட்டுவிட்டதா?" என்று கேட்டார். காமராசரே ஆயினும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்குத் தடையாயிருக்கப் பெரியார் ஒருப்படமாட்டார் என்பது இதன் மூலம் நாட்டுக்கு விளக்கமாயிற்று! அமெரிக்க ஜனாதிபதியும், உலக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவருமான, ஜான் எஃப் கென்னடி 2.11.63 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 13.10.63 அன்று, சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டி, எல்லா ஊர்களிலும் அரசியல் சட்டம் 17வது மொழிப் பிரிவுப் பகுதிக்குப் பொது இடத்தில் தீ மூட்டுவது என்று முடிவு