பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

369


இன்றி, உழைத்தேன். திருட்டு புரட்டு மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள் தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாக்க கொண்டு, எனக்குச் சரியென்று பட்டதையும், தேவை என்று பட்டதையும், செய்தேன். அதுவும், ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன். வாழ்வில், செயலில் நான் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும், அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு, முயற்சியில் சளைக்காமல், நடந்து கொண்டுதான் வருகிறேன். நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும், எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயம். நான் 1,034 பிறை கண்டவன்; அதனால் முழு வாழ்நாள் வாழ்ந்து விட்டேன்!"

எனவே, கிரமப்படிப் பார்த்தால், உங்களிடம் நான் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான், எனது நேர்மையான கடன் அதற்கேற்ப எனக்குப் புத்திக் கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞாபகக் கோளாறு அதிகமாகிவிட்டது. பேசப்பேசப், பேச்சுத் தொடர் மறந்து போகிறது. வெகு கெட்டிக்காரத்தனமாய்ச் சமாளித்துக் கொள்கிறேன். காது 10க்கு 40 பங்கு சப்தம் கேட்பதில்லை. (செவிடு) கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் மைக்கா 12 பாயிண்டு) க்குமேல் படிக்க முடிவதில்லை ; கண்களில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது. நடை 10 எட்டு, அதாவது, 15 அடி தூரத்துக்கு மேல் நடந்தால், நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் களைப்பு வந்து விடுகிறது. அதுவும் துணைப் பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை . ஹெர்ணியா (குடல் இறக்கம்) என்னும் நோய் இருப்பதில், உட்கார்ந்திருக்கும் போது, ஒரு இளநீர் அளவு பரிமாணம் குடல் இறங்கி, சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நின்றால் ஃபுட்பால் (உதை பந்து) அளவுக்குப் பெருகிப் பெரு வலி கொடுக்கிறது. இந்தக் காரணங்களில் நானே என்னைக் “கண்டெம்டு மேன்” (தள்ளப்பட்ட மனிதன்) என்றே கருதி வாழ்ந்து வருகிறேன்.

இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவதிப்படாமல் இருக்கும் வண்ணம், நோய் தெரியாமல் இருக்க, டாக்டர் குளோராஃபார்ம் (மயக்க மருந்து) கொடுப்பது போல், பணம். பண்டம் தாராளமாகக் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறீர்கள்.

திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த 5 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. வகுப்புவாரி உரிமைக்காகவும் சமதர்மத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருந்தாலும், இப்போது பிரச்சார அளவில் இருந்தால் போதும்! எப்போதுமே கிளர்ச்சிக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படக் கூடாது!