பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திரமல்லாமல், ஏழை எளியவர் சமுதாயத்திற்கும், இரட்சகர் என்கிற முறையில் காமராசர் இருந்து வருகிறார். காமராசரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு, ஆட்சிக்கும் காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுவரை நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம்தான். பார்ப்பான் குள்ள நரி ஆகி விட்டான்: முஸ்லீம் லீக் இன்று செல்லாக்காசு ஆகிவிட்டது. கண்ணீர்த்துளி, நாட்டுக்கு நியூசென்சாகி விட்டது. இது யாரால், இதற்குக் காங்கிரஸ் என்ன செய்து விட்டது?

சலிப்படையாமல் நமது தோழர்கள், கடவுள் மத சாஸ்திர சம்பிரதாய ஒழிப்புக் காரியங்களில், நம் தனிமையை எப்போதும் மறந்து விடாமல், தொண்டாற்றலாம்

1963-64 ஆகிய இந்த 85-வது வயதில் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நாட்கள் 165, பேசிய பொதுக் கூட்டங்கள் 139, கலந்து கொண்ட கழக மாநாடுகள் 6, நடத்தி வைத்த திருமணங்கள் 20 என்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது!

மண்ணச்ச நல்லூரில் பெரியாருக்குக் காளைகள் பூட்டிய டிரக் வண்டி ஒன்று வழங்கப்பட்டது. சொந்த நகரமாகிய ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள் அன்பளிப்பு: நகர மன்ற வரவேற்பு, முதலாளி சாயபு அவர்களால். பெரியார் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தகவலை அதிகார பூர்வமாக அந்தத் தகவலுடைய சேகரிப்பாளரான டாக்டர் எஸ். விஜயலட்சுமி அறிவித்தார். காஞ்சியில், பெரியாரின் எடைக்கு இருமடங்கு எடையுள்ள அரிசி வழங்கப்பட்ட போது, அதைக் கூட்டுறவுச் சங்க விநியோக முறை மூலம் மக்களுக்கே தரச் சொன்னார். கரூரில் துலாபாரம் நடத்திக் கைத்தறிப் போர்வைகள் அளித்தனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவர் என். சிவராஜ் தமது 72-வது வயதில் 29.9.64 அன்று மறைந்தார். வீரமணியின் மைத்துனி சூரிய குமாரிக்கும், கல்லூரி விரிவுரையாளர் தோழர் சா.கு. சம்பந்தத்துக்கும் பெரியார் திடலில் 27.9.64 அன்று திருமணம் என்னும் செய்தி அறிவிப்பும், அழைப்பும், பெரியார் மணியம்மையார் கையொப்பங்களுடன் வழங்கப்பட்டது. “உணவு நெருக்கடியை வியாபாரிகளே செயற்கையாக உண்டாக்கி விடுகிறார்கள். அதனாலேயே அவர்களுக்கிருந்த மரியாதை போய் விட்டது. இல்லாததை இருப்பதாகப் பத்திரிகையாளர்கள் பெரிது படுத்துகிறார்கள். உணவு சம்பந்தமான