பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்! ஆகையால் நேருவின் உறுதி மொழியை நாம் காப்பாற்றியே தீரவேண்டும்! அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.கழகம் இந்திப் பிரச்சினையைக் கட்சி நலனுக்கு உபயோகிப்பது வருந்தத்தக்கது" என்றார். காலவரம்பின்றி இங்கிலீஷ் நீடிக்க வேண்டும். இதற்குத் தமிழக அரசும் போராடும் - என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம் 5.2,65 அன்று.

“அடக்குமுறைதான் அராஜகத்திற்குப் பரிகாரம்” என்ற தலையங்கத்தில் 8.2.65 “விடுதலை”யில் பெரியார் எழுதினார்: - “அடக்கு முறையில்லாத ஆட்சி அநாகரிக ஆட்சி (Anarchism) யே ஆகும், ஜனவரி 26 அன்றைய தினம் கண்ணீர்த் துளிகளை லட்சியம் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்று அரசுக்குச் சொன்னேன். இல்லா விட்டால் கடினமான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னேன். இரண்டும் செய்யவில்லை. தேர்தலைப்பற்றி இப்போதே நீங்கள் கவலைப்பட வேண்டாம். சுதந்திரக் கட்சி, கண்ணீர்துளிக் கட்சி இரண்டையும் சட்ட விரோத மென்று தடை செய்யுங்கள். பத்திரிகைகளுக்கு வாய்பூட்டுச் சட்டம் போடுங்கள். அதே சமயம், இந்தி விஷயமாய் அரசாங்கத்தின் கொள்கை இன்னதுதான் என்று, தெளிவாக வெளியிடுமாறு காமராஜரை வேண்டுகிறேன்” என்பதாக,

இதற்குப் பிறகு பெரியாரது வேன் திருச்சியில் மடக்கப் பட்டதாகவும், சென்னையில் “விடுதலை” அலுவலகம் தாக்கப் பட்டதாகவும், செய்திகளும், வதந்திகளும் பரவின. இவ்வளவு நாள் பொறுத்துப் பார்த்துத் தமக்குச் சம்பந்தமில்லாவிடினும், நல்ல எண்ணத்தினால், கிளர்ச்சியைக் கைவிடுமாறு அண்ணா 10.2.65 அன்று வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து, “பூனை கோணியிலிருந்து வெளி வந்து விட்டது” என்று “விடுதலை” கேலி செய்தது. 10.2.65 “விடுதலை” முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், பெரியாரின் பயங்கரமான அறிக்கை ஒன்று வந்தது. உஷார் | கத்தியையும் பெட்ரோலையும் விட வேறு வகை இல்லை. என்னுடைய வேன் தாக்கப்படுகிறது. அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் கத்தியும், பெட்ரோல் டின்னும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நிலைமையைப் பார்த்து நான் மறுபடி சொல்லப் போவதை எதிர்பார்த்திருங்கள். இப்போது அடையாளம் கண்டு வைத்துக் கொண்டால் போதும்“ என்று அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது. அதற்கு மறுநாளே “பொறுத்திருங்கள், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று அமைதிப்படுத்தி, ”நான் யாருக்கும் பயந்து கொண்டு இந்த 2-வது அறிக்கை விடவில்லை“ எனவும் பெரியார் கூறியிருந்தார். ஆயினும், அதே ஏட்டின் 2-ம் பக்கத்தில் ”என்னையே எச்சரிக்கிறார்கள்; அரசாங்கத்தின் யோக்கி-