பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

377


யதை அப்படியிருக்கிறது!‘’ என்று, கலெக்டரும் போலீஸ் சூப்பரின் டெண்டெண்டும் தம்மிடம் வந்து எச்சரிக்கை செய்ததையும் குறிப்பிட்டிருந்தார் பெரியார்

மார்ச் 7-ம் நாள் வரை அரசு எல்லாக் கல்விக் கூடங்களையும் மூடிவிட்டது. மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியமும், ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமாச் செய்தனர். பிறகு ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “பார்ப்பனர் சிப்பாய்க் கலகத்தைத் தூண்டி விட்டது போலவே இப்போதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர். ஏனென்றால் அடிபடுவது பார்ப்பானல்லவே!“ என்றார் பெரியார். தர்மபுரியில் இடைத் தேர்தலைத் தள்ளிப் போடுங்கள் என்று “விடுதலை” எழுதி, அவ்வாறே, 22.2.65 நடைபெற இருந்தது, 10.4.65க்குத் தள்ளிப் போடப் பட்டது. “விடுதலை”யில் பெரியார் பிறந்த நாள் விழாக்கள், துலாபாரக் காட்சிகள் புகைப்படங்களாகத் தினந்தோறும் வெளி வந்தன. “ஆட்சி மொழிச் சட்டத்தைத் திருத்திப் பயத்தைப் போக்க வேண்டும்“ என்ற காமராசர் வேண்டுகோளும், ‘காலித்தனத்தைப் படங்கள் போட்டுப் பத்திரிகைகள் தூண்டின’ என்ற பக்தவத்சலம் ‘கண்டு பிடிப்பும்’ ”விடுதலை“யில் முதல் பக்கத்தின் ஏழு காலத் தலைப்புச் செய்திகள். “16.2.65 அன்று மு.கருணாநிதி கைது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எனத் தெரிகிறது” என்று “விடுதலை” ஏடு அறிவித்தது. “திருச்சியிலும் கண்ணீர்த் துளி சட்டமன்ற உறுப்பினர்களும், தோழர்களும் கைதாயினர்; கிளர்ச்சியினால் ரயில்வேக்கு 7 கோடி நட்டம்" என்றும் பிரசுரித்தது.

“சுதந்திரப் போராட்டத்திற்குப் பயந்து ஆங்கிலேயன் வெளியேறவில்லை . உலகயுத்தம் காரணமாய் இந்தியாவுக்கு விடுதலை தந்து விட்டுச் செல்ல நினைத்தான்” என்று ராஜாஜி சென்னை கோகலே ஹாலில் 8.2.65 அன்று பேசியது கண்டு, “ராஜாஜி உண்மையைக் கக்கி விட்டார்!” என்றார் பெரியார்! ஏன் எனில், இதுவே பெரியார் கருத்தல்லவா? பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 4,5 கூட்டங்களுக்கு மேல் பெரியார் வெளியில் பயணம் மேற்கொள்வில்லை, திருச்சியில் “திராவிடமணி” இதழ் நடத்திய டி.எம்.முத்து 18.2.65ல் காலமானார்.

23.2.65 அன்று அறிக்கையில், தமிழ்நாடு மாணவர் கவுன்சில், நடந்த சம்பவங்களுக்கு வருத்தந் தெரிவித்து, இனி, உள்நாட்டு நிலவரம் சரியில்லாததை முன்னிட்டுக் கிளர்ச்சி நிறுத்தப்படுகிறது. முதியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துவிட்டது. “நான் மறியலில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாணவர்களைத், தடையை மீறாதீகள் என்று சொல்லத்தான் போனேன்” என்று குன்றக்குடி அடிகளார் தன்னிலை விளக்கம் தந்திருந்தார். இங்கிலிஷே