பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இணை மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் சாஸ்திரி கூறினார். “சுதேசமித்திரன்”, “மாலை முரசு”, “தினத்தந்தி”, “முரசொலி ‘’, ”மாலைமணி”, ஆகிய பத்திரிகைகளின் மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. “மாலைமணி” இளங்கோ , முரசொலி மாறன், தினத்தந்தி டி.ஆர, பீம்சிங் கைதாயினர். மத்திய அரசு உபரி பட்ஜெட்டும், தமிழக அரசு புதுவரியில்லாத பட்ஜெட்டும், இந்த ஆண்டுக்குச் சமர்ப்பித்தன.

“சர்க்காருக்கு நல்ல படிப்பினை” என்று 2.3.65ல் பெரியார் “விடுதலை” தலையங்கம் தீட்டினார். இப்போது கட்டாய இந்தி கிடையாது கட்டாய இந்தி நுழைந்த போதே எதிர்த்தவன் நான்தானே? இந்தியும் வேண்டும், ஆங்கிலமும் வேண்டும் என்று நான் சொல்லவில்லையே! அறிஞர் அண்ணாத்துரையும் நாவலர் நெடுஞ்செழியனும் முத்தமிழ்க் காவலரும்தானே சொல்லி வருகிறார்கள் - இந்தி அரசியல் மொழி என்ற நிலைமையிலிருந்து இனி அதை எடுக்க முடியாது! ஆங்கிலமும் இருக்கும் என்ற உறுதி மொழியைப் பெறலாம். ஆனால் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள் இவ்வளவு கலவரம் செய்தும் கூட அவர்களில் யாருமே இப்போது கைதாகவில்லையே?“ என்றார் பெரியார். அடுத்த நாளும், ”நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பீர்களானால், சொல்கிறேன்; 'இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன்! ஆனால், நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சினை அல்ல; அரசியல் பிரச்சினைதான்! பதவியில் இருந்தபோது இந்தியைப் புகுத்திய ஆச்சாரியார், இப்போது பதவி கிடைக்காததால் எதிர்க்கிறார் என்னைப் பொறுத்த வரையில் காமராசர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்றால், காமராசர் ஆட்சி இந்தியை ஒழித்துவிடும் என நம்புவதால், முதலில் காமராசர் ஆட்சி நிலைக்கவே பாடுபடுவேன்!“ என்று ”என்னைப்பற்றி“ எனுந்தலைப்பின் கீழ், தலையங்கம் எழுதினார் பெரியார் ”விடுதலை"யில் ,

மார்ச் 6ம் நாள் “கேரவன்” இதழ் பெரியாரின் கருத்தையே ஆதரித்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கான சூழ்ச்சியே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, என எழுதிற்று. மாணவர்கள் மீது தொடரப்பட்ட எல்லா வழக்குகளையும் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. முன் கூட்டியே திட்டமிட்டிருந்தால் அரசு நாசத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று பெரியார், மார்ச் 8-ல் கருத்தறிவித்தார். அடுத்த நாள் முதல் “விடுதலை”யில் பெரியாரின் மூன்று பெட்டிச் செய்திகள் கவர்த் திழுத்தன. “ஓ தமிழே! உனக்கு ஏன் 247 எழுத்து? 30, 35 போதுமே என்று ஒன்று; ”ஹே தமிழா! நீ சுத்தத் தமிழனாயிருந்தால் இனி... பத்திரிகையைப் படிக்க மாட்டேன் என்று கையெழுத்துப் போட்டு