பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

379


அனுப்பு. நான் அதற்கு நாள் குறிக்கிறேன்” என்று இன்னொன்று: “சிந்தி! சிந்தி! நீ தமிழன் என்று சொல்லிக் கொள்ள உன் நடத்தையில், உன் கடவுளில், உன் மதத்தில் உள்ள தனிக்குறிப்பு என்ன?” என மற்றொன்று!

வைக்கம் வீரர் பெரியாரைக் கேரளா மீண்டும் வரவேற்று, அழைத்துச் சிறப்பித்துப் பாராட்டிப், போற்றிப் புகழ்ந்தது. 11.3.65 தேன் கார்த்திகைப் பள்ளியில், டி.கே. மாதவன் நினைவுக் கல்லூரிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார் பெரியார். தலைமை தாங்கியவர் ஈழவ சமுதாயத் தலைவரும், அண்மையில் கவிழ்க்கப் பட்டவருமான கே. சங்கர், முன்னாள் முதலமைச்சர்! எஸ்.என். டி. பி. யோகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட பெருமக்கள் பெரியாரை மிகவும் கொண்டாடினர்; ஆங்கிலத்தில் பெரிய வரவேற்பு மடல் வழங்கினர்; தென்காசி வந்து அழைத்துச் சென்று சிறப்புச் செய்தனர். கேரளாவில் இடைத் தேர்தல் நடந்து, அதிக இடம் பெற்ற இடது சாரிக் கம்யூனிஸ்டும் அறுதிப் பெரும்பான்மை பெறாமையால், மீண்டும் 25.3.65 அன்று. புதிய சட்டசபையும் கலைக்கப்பட்டு விட்டது ஜனாதிபதியால்!

பெரியார் மார்ச் மூன்றாம் வாரத்தில் சென்னையில் பேசினார். “சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட நாசங்கள், இந்த ஆட்சியை ஒழிப்பதற்கான சதியே ஆகும்! இந்த ஆட்சி போய் விட்டால், அடுத்தது பார்ப்பன ஆட்சிதானே வரும்? சோஷலிச எதிரிகளால்தான், மாணவர்கள் அவர்களுக்குப் பகடைக் காய்களாக ஆனதால்தான், இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டன! இதை எழுச்சி என்று சொல்வது முட்டாள்தனம்! கோழைத்தனமாகும். இதில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நினைக்கிறார்கள். இது வெற்றியா? வெட்கக்கேடான தோல்வியா? என்று சிந்திக்க வேண்டும்! இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பார்ப்பானோ, பத்திரிக்கைக் காரர்களோ, பணங் கொடுத்துத் தூண்டிவிட்டவர்களோ அகப்படாமல் தப்பித்துக் கொண்டார்கள்! கூலிக்குச் செய்தவர்களைத் தேடிப் பிடித்து வருகிறது இந்த வீர அரசாங்கம். அப்பாவித் தமிழர்களே! பார்ப்பான் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளுங்கள் பாவம், கருணாநிதி மட்டும் மாட்டிக்கொண்டார்! அவர் தோழர்களே, அவரை மாட்ட வைத்திருப்பார்கள்.

இப்போது சங்கராச்சாரியார்கூட, ஆயுதம் வைத்துக் கொள்வது தற்காப்புக்காக அவசியந்தான், என்று சொல்லி விட்டார். காங்கிரசையும் நாம் ஏதோ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர நம்ப முடியாது என்பது, அண்மையில் நடந்த சம்பவங்களால் அறிந்து கொண்டு விட்டோம் என்று இந்தக் கருத்துகளைப் பேசியும் எழுதியும் பெரியார் வெளிப்படுத்தினார். தொடர்ந்து, தர்மபுரி இடைத் தேர்தலில்