பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

381


தலையங்கத்தில் பார்ப்பனரல்லாத ஜில்லா ஜட்ஜ், தலைமை மாகாண நீதிபதி ஆகியவர்களின் பெயர்களைக் குறிப்பீட்டு, “ஏன் இவர்களை ஐக்கோர்ட் ஜட்ஜாகப் போடக் கூடாது?” என்றே, வெளிப்படையாகக் கேட்டார் பெரியார்.

தஞ்சாவூரில் காய்கனி மார்க்கெட்டுக்குக் காமராசர் மார்க்கெட் என்று ஏப்ரல் 16ம் நாள் பெரியார் பெயரிட்டார். கல்லக்குறிச்ரியில் 18ம் நாள் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. “விடுதலை“ ஏட்டுக்குச் சந்தா செலுத்தும் நிகழ்ச்சி, விமரிசையாக அங்கு நடைபெற்றது. பெரியாருக்கு வெல்ல துலாபாரமும் செய்யப்பட்டது. இந்த மாதத் திட்டத்தில் நெல், அரிசி, மணிலா, காய்கறி, கண்ணாடிக் குவளைகள், உப்பு, வெங்காயம் ஆகியவை பல ஊர்களிலும் பெரியாரின் எடைக்குச் சமமாக அன்புடன் அளிக்கப்பட்டன. 24 ராணிப் பேட்டை , 26 திருவண்ணாமலை நகராட்சிகள் பெரியாருக்கு வரவேற்பளித்தன. சென்னை மாநகராட்சியில் ஊழல்கள் நடப்பதாகவும், கண்ணீர்த்துளிக் கவுன்சிலர்களே தங்கள் நிர்வாகத்தைக் குறை கூறுவதாகவும், “ விடுதலை”யில் அடிக்கடி சேதிகள் வந்தன. நீண்டகால இயக்கப் பிரமுகர் வேலூர் ஈ.திருநாவுக்கரசு 3.5.1965 மாலை 7.30 மணிக்கு மறைந்தார். “விடுதலை” துணைத் தலையங்கம் தீட்டி மரியாதை செய்தது.

திருநெல்வேலி நகரமன்றம் மே 8-ம் நாள் பெரியாருக்கு வரவேற்பளித்த போது, “அரசியல் கட்சிகளால் நகர நிர்வாகம் பாழாகிறது; நம்முடைய மக்கள் இன்னும் ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லை “ என்று பெரியார் கருத்துக் கூறினார். கும்பகோணம் திராவிடர் கழகத் தோழர்களும், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி, கா.பா. பழநி ஆகியோரும் முயன்று, 5,000 ரூபாய் செலவில், பெரியாருடைய வேனைப் புதுப்பித்துத் தருவதாக முடிவெடுத்து, அவ்வாறே, மே இறுதியில், பெரியார் பிறந்தநாள் விழா எடுத்து, அங்கு வண்டியை அளித்தனர். காமராசர் திருச்சியில், “தகுதி திறமை பேசுகின்ற மோசடி ஒழிய வேண்டும்” என்று தீவிரமாகப் பேசினார். தமிழ் நாட்டின் 9 மாவட்டங்களில் 18 நாட்களில் 1,600 மைல் சுற்றுப் பிரயாணம் செய்து சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காமராசருக்கு மகத்தான வரவேற்புத் தரப்பட்டது. பெரியாருடைய பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தும் முறையில், மேலும் சிறிது அபிவிருத்தியுள்ள திட்டம் ஒன்று வகுக்கப் பட்டிருப்பதாக, வே.ஆனைமுத்து அறிவித்தார். அதன் பிரகாரம், பெரியாரவர்கள் திருச்சி மாவட்டத்தில், ஜூன் 18 முதல் 28 முடிய சுற்றுப் பயணம் நிகழ்த்தும் போதே, சில குறிப்பிட்ட ஊர்களில், பகற் பொழுதில், பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள் என்பதாகும்.