பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஜூன் மாதம், பெரியாரைத் திருச்சியில் “ஆனந்த விகடன் துணையாசிரியர்கள் சாவி, மணியன் இருவரும் பேட்டி கண்டு, கட்டுரை வெளியிட்டனர். அதில் வ.வே.சு. அய்யரைப் பற்றிப் பெரியார் குறிப்பிட்ட சில விவரங்களை மறுத்து, அய்யர் மகனும், இன்னொருவரும் தெரிவித்த கருத்துக்களையும்; அவற்றுக்குப் பெரியார் அளித்த விளக்கத்தையும் “ஆனந்தவிகடன்” பிரசுரித்திருந்தது. அவற்றிலிருந்து, பெரியாரின் கருத்து சரியெனவே நிரூபணமாயிற்று. பெரியாருக்குத் திண்டுக்கல் தோழர்கள் தங்கள் பகுதி விளை பொருளான சிறுமலைப் பழத்தைத் துலாபாரம் செய்தனர். “ஆட்சியினரும் சமதர்மத் திட்டத்துக்கு எதிர்ப்பாகி வருகின்றனர்! சம உரிமை வழங்கப்படாவிடில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் முன்னேறுவது எங்ஙனம்?” என்று பெரியார் ஆத்திரத்தோடு கேட்டார். பக்தவத்சலம் ஆட்சியில், பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் பெற்றுப் படிப்படியே உயர்ந்து வருவதைக் கண்காணித்ததால், இப்படிச் பேச நேரிட்டது! செக்ரெடேரியட்டா? அக்ரகாரமா?“ என்ற ”விடுதலை" ஜுன் 19ந் தேதியில் தலையங்கமே எழுதியிருந்தது.

“கம்பனும் இராஜாஜியும் ஒரே தன்மையர்கள் - கம்பன் பார்ப்பன அடிமை, தமிழர் துரோகி; இராஜாஜி தமிழர் விரோதி; தமிழர் துரோகி; இவர்கள் இருவரையும் பாராட்டுகின்ற தமிழனே கீழ்மகனாக்கப்படுகிறான்“ என்று வேதனையோடு எழுதினார் பெரியார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராயிருந்து கொண்டு, பல்லாற்றானும் தமிழர்க்கு இன்னல் விளைத்து வந்த சச்சிவோத்தமரைக் கண்டித்து, ”சர். சி. பி. யின் கரை கடந்த அக்கிரமம்“ என்று தலைப்பிட்டுப் பெரியார், 29.6.65 ”விடுதலை“யில் எழுதினார். முதலமைச்சர் கோயில் திருப்பணிகளில் அதிகக் கவனம் செலுத்துவது கண்டு, மிக்க எரிச்சலுடன், “பக்தவத்சலம் கோயில் குட்டிச் சுவர்களுக்குச் சாயம் பூசி வருகிறார். நாமெல்லாம் என்ன எருமை மேய்க்கிறோம் என்று நினைக்கிறாரா முதன் மந்திரியார் துணிந்து விட்டார்! நமக்கென்ன? இனி நாமும் துணிவோமே!” என்று, கும்பகோணம் கூட்டத்திலேயே, பெரியார் தெரிவித்த கருத்துக்கிசைய, “விடுதலை”யும் "முதல் மந்திரியின் திருப்பணி” என்ற தலையங்கம் தீட்டிற்று.

கரூரில், கவிஞர் தஞ்சை வாணன் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘களங்கண்ட கவிஞன்’ நாடகத்துக்குப் பெரியார் தலைமை தாங்கி, 21.6,65 அன்று பாராட்டிப் பேசினார். அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் நடந்த பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளில் பேசுகையில், இந்த ஆட்சியைத் தட்டிக் கேட்க நமக்குத் தானே உரிமை உண்டு? தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டது; இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த மாதம் மாநாடு கூட்டிக் கிளர்ச்சி