பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

383


துவக்க முடிவு செய்வோம் என்று முழங்கினார் பெரியார். “தகுதி திறமை பேசும் அயோக்கியத்தனம்“ என்ற தலைப்பின் கீழ், ”விடுதலை“யில் இரண்டு நாள் தலையங்கம் எழுதினார். ரெவின்யூ அதிகாரிகளிடையே பாகுபாடு பற்றி விளக்கினார். ”சாதாரண தாலுக்காபீஸ் குமாஸ்தா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கிரஸ்ததார், தாசில்தார், டிப்டி கலெக்டர் ஜில்லா கலெக்டர் என்று படிப்படியே உயர்ந்து வந்து, சுமார் 25, 30 வருட அனுபவமும், ரெவின்யூ சர்வே, அக்கவுண்ட் ஆகிய எல்லாத் துறைகளையும் கரைத்துக் குடித்து விட்டு வருகிறவரைவிட, எப்படியோ, யாரையோ பிடித்து, எங்கோ பாஸ் செய்து விட்டு, நேரே ஐ.ஏ.எஸ். ஆக வருகிற பச்சகானாக்கள் (சிறு பிள்ளைகள்) எப்படிச் சிறந்தவர்கள் ஆக முடியும்?“ என்று விவரமாகவே கேட்டார், பெரியார்! “விடுதலை”யில், கிறிஸ்துவர்களுக்கு எண்ணிக்கை மீறிய உத்தியோகச் சலுகை தரப்படுவதைக் கண்டித்து எழுதியதைச் சுட்டிக் காட்டி, தூத்துக்குடி காங்கிரஸ் எம்.எல்.சி.யான ஜே. பொன்னுசாமி வில்லவராயர், கிறிஸ்துவர்கள் அந்நியர்களல்லவே, என்று கடிதம் எழுதியிருந்தார். அதையும் பிரசுரித்து, 22.6.65 அன்று, “விடுதலை” ஆசிரியர் பதிலும் - “அதாவது, யாராயிருந்தாலும் அவரவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்துக்கு மேல் அனுபவித்து வருவதை இடித்துத் காட்டுவதே எங்கள் பணி. அதை நாங்கள் சரியாகவே செய்து வருகிறோம்" என்று வெளியாகியிருந்தது.

பெரியாரின் பேச்சுக்கு உடனடிப் பயனாக, இந்தக் கல்வியாண்டில், தமிழகத்தில் 110 புதிய உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுக் கல்வி நீரோடை தங்குதடையின்றிப் பொங்கிப் பரவியது, மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு பி.யூ.சி.க்கு 7,000 இடங்கள் என்ற பூரிப்பான செய்தி தரப்பட்டதையடுத்து, சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பாராட்டிய “விடுதலை” இதற்கு முரணான போக்கைக் கையாளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கண்டிக்கவும் தவறவில்லை . 5 லட்சம் ரூபாய் பெரியார் வழங்கிட, இந்த ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி திருச்சியில் துவங்கப் படுவதற்கான சூழ்நிலைகள் தோன்றின. மூன்றாவது பல்கலைக் கழகம் அமையும் அறிகுறிகள் தென்பட்டதால், அது அமைவதற்கு ஏற்ற இடம் திருச்சிராப்பள்ளிதான், என்று பெரியார் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. இடம் 350ல் இருந்து 400 என ஆக்கியதால், சர்.சி.பி. பாராட்டப் பெற்றார்.

சென்னையில் நடைபெற்ற நீதித்துறைப் பெரியோர்களின் கருத்தரங்கு ஒன்றில், சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்க ஒரு சட்டம் தேவை என்ற கருத்து முன்னிடம் பெற்றதை ஒட்டி, “விடுதலை"யும் அரசினரை வலியுறுத்தியது. மேலும், வகுப்புவாரி