பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

385


உரியவனுக்குப் பங்கு இல்லையா? அரசாங்கம் உடனே ஒரு சுற்றறிக்கையாவது விடவேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதலுரிமை கொடுத்துவிட்டு, மற்றதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று. நமது முதல் மந்திரியார் செய்வாரா? அவரோ மேல் ஜாதி"

தொடர்ந்து பெரியார் எழுதி வந்தார்; சமுதாய நீதியை வழங்கித், தற்காலக்கல்வி நெருக்கடியைத் தீருங்கள் என்று. “காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கிறது, பணக்காரனை ஒழிக்கிறது; அப்பேர்ப்பட்ட காங்கிரசை ஒழிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் விபீஷணராக இருக்கிறது. உழவர் கட்சி, குடி அரசுக் கட்சி, முத்து ராஜு கட்சி, நாம் தமிழர், தமிழ் அரசு, இடதுசாரி கம்யூனிஸ்டு, ஆச்சாரியாரின் கட்சி, வியாபாரிகள் கட்சி இவை அத்தனையும் சேர்ந்து காங்கிரசை பலவீனப் படுத்துவது சமூகத் துரோகமல்லவா?” என்று பெரியார் வினவினார். “மரியாதைக்குரிய குன்றக்குடி அடிகளாரைக் கோர்ட்டுக்கு வரச்சொல்லி 500 ரூ. அபராதம் போடுவதா? தமிழன் ஆட்சியே தமிழர்க்குக் கேடாவதா? பதவி முழுவதும் பார்ப்பனுக்கா? வகுப்புரிமை பெற இயலாதென்றால் இந்திய யூனியனிலிருந்து விலகுங்கள். தமிழகம் பிரிந்தாலன்றிக் குறைதீர வழியில்லை. மதவெறியுள்ள ஆட்சியில், சமதர்மம் எப்படி வரமுடியும்? இந்த மந்திரிகளே, எல்லாரும் தகுதியற்ற மந்திரிகள்! இந்த அரசாங்கமே நமக்குத் தகுதியில்லை !” - ஆகஸ்ட் 10 முதல் 16 வரை சென்னையின் பல முக்கிய பேட்டைகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பெரியாரின் முழக்கம் இவ்வாறுதான் இருந்தது!

“குடும்பக் கட்டுப்பாடோ, கருத்தடை செய்வதோ இயற்கைக்கு மாறானது; சுயக் கட்டுப்பாடுதான் தேவை என்று ராஜாஜியின் பிற்போக்கு வாதத்தைச் சாடியது ”விடுதலை" கண்ணீர்த் துளிக் கட்சியைச் சார்ந்த நடிகர்களான எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் மீது நடந்த வழக்கில், 100 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதச் சிறைவாசம் விதிக்கப்பட்டது. இன்னொரு நடிகரான எம்.ஜி. ராமச்சந்திரன் 8.8.65 அன்று பெரியார் திடலில் நடந்த காமராசர் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு, காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி என்றார். பெரியாரையும் பாராட்டினார். மலேயாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சிங்கப்பூர் தனி நாடாகப் பிரகடனம் செய்து கொண்ட நிகழ்ச்சி, ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தந்தது! அறிஞர் அண்ணா கீழ்த்திசை நாடுகளில் வெற்றிகரமான ஒரு சுற்றுப் பயணம் சென்று 21.8.65 அன்று குதூகலத்துடன் திரும்பினார்.