பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



நாகப்பட்டினத்தில், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் கூடி, பெரியாரின் 87ம் பிறந்த நாளில், ரூ.40,000 நிதி திரட்டி உதவுவதெனத் தீர்மானித்தது. திருச்சி காஜாமலையில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி 24.8.65 அன்று தமிழக முதல்வர் பக்தவத்சலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 54 லட்சம் ரூபாய் பணம் உதவிய கல்வி வள்ளல் பெரியாருக்கு, முதல்வர் பொன்னாடை போர்த்தினார். பெரியாரைப் பேசச் சொல்லவில்லை. கல்வாரி பிரின்சிபால் கமலக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் சொக்கலிங்கம் தலைமை ஏற்றார்.

“இந்திய அரசியல் சட்டம் மோசடியானது. இந்திய அரசியல் சட்டம் பித்தலாட்டமானது. தமிழர்களுக்குத் திராவிட மக்களுக்குத் துரோகமானது. இந்திய அரசியல் சட்டம் யோக்கியமற்ற தன்மையானது. இதை இயற்றிய அரசியல் நிர்ணயசபை, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. அரசியல் சட்டம் இயற்றுகின்ற காரியத்துக்காகவும் அது தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல! சுதந்தரமே மோசடியானது தான்” என்ற கருத்தினைப் பெரியார் எழுதினார். ஆகாச வாணியில் பி.எஸ் சிவஸ்வாமி அய்யர், ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் சேலம் விஜயராகவாச்சாரியார், எஸ். சத்திய மூர்த்திய அய்யர் ஆகிய நான்கு பெரு மக்களின் பிறந்த நாள் விழாக்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். என்ற வர்ணாசிரம தர்மச் செய்தியை, “விடுதலை” 1.9.65 அன்று பெட்டிச் செய்தியாக வெளியிட்டுக் காண்பித்திருந்தது

பாகிஸ்தான் சீனா இருநாடுகளும் வட இந்தியப் பகுதிகளில் தொல்லை தந்துவந்தன. “தம் துரோகிகளை நம்பியும், பார்ப்பனர்களின்- பத்திரிகைகளின் காட்டிக்கொடுக்கும் தன்மையை நம்பியும் படையெடுத்த பாகிஸ்தான், ஒரு போதும் நம்மை வெல்ல முடியாது. பொது மக்கள் ஐந்தாம் படையினரின் விஷமங்களுக்கு இடந்தரக் கூடாது. கண்ட்ரோல், ரேஷன் முதலியவற்றால் நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தாமல், நம் அரசுக்குப் போர் முயற்சிகளில் நாம் உதவ வேண்டும்." என்று பெரியார் தமது சுற்றுப் பயணத்தின்போது பிரச்சாரம் புரிந்தார். இந்த ஆண்டு தமது 87வது பிறந்தநாள் விழா அன்று பெரியார் பெங்களூரில் இருந்தார். ஜி.டி. நாயுடு அங்கு சென்று வாழ்த்துக் கூறியதோடு, கோவையில் குறிப்பிடத்தக்க ஒரு விழாவுக்கு, அதன் விவரம் கூறாமலே, பெரியாரிடம் தேதி பெற்றுச் சென்றார். காங்கிரஸ்காரரான திருமதி கமலா யாதவ் அம்மையார் தலைமையில், பெங்களூரில், பெரியார் பிறந்த நாள் விழாவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் கண்டன நாளும் சீருடன் கொண்டாடப் பெற்றன. சனகம்மையார் பெரியாருக்குப் பண ஆடை போர்த்தினார். சி.டி. அரசு, விசாலக்குமி சிவலிங்கம் வாழ்த்திப் பேசினார்கள்.