பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

387



பெரியாரின் 87-வது ஆண்டு பிறந்த நாள் செய்தி இப்படியாக அமைந்திருந்தது; “இந்தியாவுக்குச் சமீபத்தில் வந்திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம் ஒரு பார்ப்பனர் - இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம். அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றிச் சங்கராச்சாரியாரிடம் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும், உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஓர் இயக்கம் நடத்துகிறாரே, அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன -? என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார்-ஆமாம்! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும், அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்."

இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன? என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும் போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். 'அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும். நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனருக்கு வந்த நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்து விட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததையெல்லாம் திரும்பவும் பெற்றுக் கொண்டு, மேலேற நல்ல வசதி ஏற்பட்டது.

அது மாத்திரமில்லாமல் நானும் பார்ப்பனச் சுதந்திரத்தை எதிர்க்கின்ற வேலையை விட்டு விட்டேன். இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம், என்ற ஆணவம் எனக்கு. காமராசரிடத்தில் வைத்த, அளவுக்கு மீறிய நம்பிக்கை வேறு. இப்போது காமராசர் ஆட்சியை விட்டுப் போய் விட்டாலும், அசல் பார்ப்பனீய ஆட்சியே நடைபெற்றாலும் கூட நான் அதை வெளியில் சொல்லி, அழுது, திருப்திப்படக் கூடிய நிலைமை கூட இல்லாமல், காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் விட்டேன். இது பார்ப்பனர்களுக்கு லாபமான விஷயமாகி விட்டது' என்று நான் பதில் சொன்னேன். அந்த ரஷ்யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.