பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஆம். இன்று பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக் கட்டத்-தோல்வியடையச் செய்யப் பாடுபட்டாலும், அப்பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப, எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள, பக்த கோடிகளான மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் எனக்குள்ள ஆறுதல் என்னவென்றால், இவ்வளவு எதிர்ப்பிலும் ஏமாற்றத்திலும்கூட, எனது தொண்டுக்குச் சாதகமாக இருக்கும் சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும், சுயநலமற்றுத் தியாக உணர்வுடன், எவ்விதப் பிரதிப் பிரயோஜனமும் எதிர்பாராமல், ஒழுக்கம் நாணயம் என்பதிலிருந்து ஒரு சிறிதும் வழுவாமல் தமிழ் தாட்டில், சென்னை முதல் குமரி வரை, ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து ஆதரவளித்து, உற்சாகமூட்டி வருவதுடன், படிந்து தொண்டாற்றியும் வருவது எனக்கு உயிரூட்டிச் சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. நமது இயக்கத்தால், உழைப்பால், மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல், மனமாற்றம் ஏற்பட்டு வருவதை உணருகிறேன்.

நாம் காங்கிரசைக் ‘காப்பாற்றும்’ தொண்டில் இறங்காமல் இருந்து, இந்த 10, 12 ஆண்டுகளில் 2,3 முறை பதினாயிரக் கணக்கில் சிறை சென்று, காங்கிரசை எதிர்த்திருந்தால், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை, கல்வி முன்னேற்றம், சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி, முழு ஆலயப் பிரவேசம் ஆகியவற்றில் பல உரிமைகள் பெற்றிருப்போம். என்ன செய்வது? இனியும் நாம் ஒன்றரை ஆண்டுக் காலத்திற்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நமது தொண்டுக்கு நன்றி காட்டாவிட்டாலும், நமது இலட்சியத்திற்குக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால், அப்படியில்லாமல், நம்மால் காங்கிரசாட்சிக்கு ஒரு பயனும் இல்லை, தொல்லைதான் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது; தமது நிவர்த்தி இல்லாத முட்டாள் தனத்தைப் பற்றி, வெட்கப்பட வேண்டியதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

கும்பகோணத்தில் கவிஞர் கண்ணதாசனின் “நான் ராஜாவானால்?” என்ற நாடகம் 19.9.65ல் நடந்தது. நாடகத்தில் ரசபாவம் வேண்டும். மூட நம்பிக்கைகள் அரசியல் துறையிலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டும் - என்று பெரியார் பேசினார். சிவாஜி கணேசனோ- நாங்கள் கமர்ஷியல் ஆக்டர்கள், கண்ணதாசன் அரசியல் ஆக்டர் என்றார், பெரியார், “நம்முடைய நாடு சுதந்திரம் பெறாமலும், நம்முடைய கடவுள் மதம் ஆகியவை யோக்கியமாக இராமலும்,