பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

393


சட்டம் இயற்றுதலும் ஒழியும் - என்ற தமது கருத்தைப் பெரியார் 1.1.1966 தலையங்கம் மூலமாகத் தெரிவித்து வலியுறுத்தினார். “திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி சும்மா ராஜிநாமா செய்யவில்லை. மிக பலத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார். டிடிகே டிவிஎஸ் கம்பெனிகளுக்கு, எண்ணற்ற சலுகை காட்டினாராம். அவர் மீது நடவடிக்கை வேண்டாமா? ராஜிநாமா போதுமா? பார்ப்பன நீதியும், தர்மமும் இப்படித்தானா? இதில் அரசாங்கத்தின் Stand என்ன?” என்று பெரியார் எழுதித் தீர்த்துவிட்டார்!

ஜனவரி 8-ம் நாள் பெரியார் திடலில் சிவாஜிகணேசனின் “வேங்கையின் மைந்தன்" நாடகம் நடந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துணைமேயராயிருந்து, சம்பத்தோடு போன மணிவண்ணன் உதவிக்காக நடந்தது இது. பெரியாரும், காமராசரும்; அப்போதுதான் காங்கிரசில் சேர்ந்த டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டனர். கண்ணதாசன் வரவேற்றார். நமக்கு மானஉணர்ச்சியும் துணிவும் ஊட்டியவர் பெரியார்தான் என்று காமராசர். பாராட்டினார். தலைவர் காமராசரால்தான் நம் தமிழ் நாட்டுக்கு விமோசனம் ஏற்பட்டது; கல்வி பெருகியது என்று பெரியார் பாராட்டினார். வசூலான தொகையாகிய 3,000 ரூபாயைக் காமராசர் வழங்கினார். நடிகர் திலகம் சிவாஜி 1,200 ரூபாய் வழங்கினார். வள்ளல் பெரியாரும் 1000 ரூபாய் வழங்கியருளினார். இந்த நேரத்தில் பெரியார், தாம் ரஷ்யாவில், கருத்து மிக்க 3, 4 நாடகங்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டு, அவற்றில் ஒரு கதையையும் சொன்னார். பாதிரி ஒருவர் ஒரு மகானுடைய சமாதிக்குப் பக்கத்தில் அமர்ந்து, அவர் பெருமைகளைச் சொல்லி, ஏராளமாகப் பொருள் குவித்து வந்தார். அவருடைய மகன் கட்டுப்பாடில்லாமல் திரிந்ததால், அவனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து, இதை வைத்து எங்காவது போய்ப் பிழைத்துக் கொள் என்றாராம். சில நாள் கழித்து அவனும் ஏதோ ஒரு மகானுடைய சமாதி எழுப்பி, அதன் மூலமாக வருவாயை உண்டாக்கிப் பெருமையுடன் வாழ்ந்து வரக் கேள்விப்பட்டு, அவனைப் பார்த்து, யாரடா இந்த மகான் என்று கேட்டாராம் அப்பா, யாரிடமும் உண்மையைச் சொல்லி விடாதீர்கள்! நீங்கள் கொடுத்தீர்களே கழுதைக் குட்டி அது செத்துப் போய்விட்டது அதைத்தான் இங்கே புதைத்து விட்டுச், சமாதி கட்டி, மகான் சமாதி என்று மகத்துவம் உண்டாக்கினேன் என்றானாம். அட மடையா! நான் வைத்திருக்கும் சமாதி மட்டும் எந்த மகானுடையது என்று நினைத்தாய்? இதே கழுதையினுடைய தாய்க்கழுதையின் சமாதிதான் அது, என்றாராம் தந்தை! இதன் மூலமாகப் பாதிரிகளின் மோசடிகளை விளக்கி, மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குகிறார்கள் ரஷ்யாவில். இங்கு அப்படியில்லையே? என்றார் பெரியார்.