பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ரஷ்யாவில், டாஷ்கண்டில், கோசிஜின் முயற்சியால் சந்தித்துப் பேசிய அயூப்கான்-லால்பகதூர் சாஸ்திரி பேச்சு வார்த்தைகளில், நல்ல திருப்பம் ஏற்பட்டது. “டாஷ்கண்ட் முடிவினால் இந்தியாவுக்குத் தொல்லை நீங்கிற்று: பாகிஸ்தானுக்குத் தோல்வி நீங்கிற்று; கோசி ஜின்னுக்கு உலகப்புகழ் கிடைத்தது“ - என்று பெரியார் கருத்துக் கூறினார். ஆனால் அந்தோ! இந்த வெற்றியைத் தொடர்ந்து சாஸ்திரியின் திடீர் மறைவுச் செய்தியும் கிட்டியது. பெரியார் திருச்சியிலிருந்து தொலை பேசி வாயிலாக ”விடுதலை"க்கு அனுதாபச் செய்தி அனுப்பினார். அடுத்த பிரதமர் சவானாக இருக்கலாம் எனப் பெரியார் யூகித்தார், அவர் மராட்டியர் என்பதால் ஆனால் ராஜாஜி, தன் விருப்பம் நந்தா என்று தெரிவித்தார். இதற்குள் இந்திராகாந்தியின் பெயர் அடிபட்டது. காமராசரால் ஆதரிக்கப்பட்டவர்யாராயிருந்தாலும் சரிதான். அது இந்திராவானாலும் நல்லதே என்று பெரியார் கருதினார். 19.1.66 அன்று, பிரதமர் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இந்திராகாந்திக்கு 355 வாக்குகளும், மொரார்ஜி தேசாய்க்கு 169 வாக்குகளும் கிடைக்கவே, முறைப்படி இந்திரா பிரதமரானார். 66ல் ஆசைப்பட்ட மொரார்ஜிக்கு, 77-ல் கிடைத்தது இந்தியப் பிரதமர் பதவி! இந்தத் தேர்தல், சமதர்மத்திற்கும்-ஜாதி, பணதர்மத்திற்கும் இடையில் நடந்த போராட்டமே எனப் பெரியார் கணக்கிட்டார்.

மத்திய சுகாதார அமைச்சர் சுசீலா நய்யார் தகுதி திறமை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். “இவர் யாரென்றே நாட்டுக்குத் தெரியாது! இருக்கிற பதவியினால் இப்படிப் பேசுகிறார்களா இந்த அம்மையார்? இது என்ன முட்டாள்தனமா? அல்லது யோக்கியமற்றதனமா?" என்று பெரியார் மிகுந்த ஆத்திரமும் சினமும் கொப்புளிக்கக் கேட்டார். தஞ்சையில், கீழ ராஜ வீதியில், கழகத்திற்கென வாங்கப்பட்ட பெரியார் இல்லம், புதுப்பிக்கப்பட அவசியம் ஏற்பட்டது. ஏற்கனவே அந்தப் பழைய கட்டடம் வாங்கவும் பெரியாரே 12,500 ரூபாய் வழங்கினார். இப்போதும் 8,500 ரூபாய் தந்தார். நடிகவேள் ராதா ரூ.3,000 பெறுமான இரும்பு வாரைகள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார். (ஆனால் தரவில்லை) தஞ்சை மாவட்டக் கழகத்தினரும் நன்கொடை திரட்டினர். அனைத்தும் சேர்ந்து, ரூ.34,000 மதிப்புள்ளதாக உருவாக்கப்பட்ட அக்கட்டடத்தை எம்.ஆர். ராதா, ஜனவரி 23ம் நாள் திறந்து வைத்தார்; பெரியார் சிறப்புரை நிகழ்த்தினார். பெரியார் பிறந்த நாளையொட்டி 30.1.66 அன்று, சேலத்தில், 117 வெவ்வேறு பொருள்கள், சுமார் 3,000 ரூபாய் மதிப்புள்ளவற்றை பெரியாருக்கு அன்பளிப்பாகப் பலரும் உதவினார்கள். 31- ம் நாள் சென்னை தண்டையார்பேட்டையில், ஜீவானந்தம் சிலை திறப்பு விழாவை ஒட்டி, ஜீவா வாழ்க்கை வரலாறு என்று கே.பாலதண்டாயுதம் எழுதிய நூலைத் தாட்டே தலைமையில் பெரியார் வெளியிட்டார். முந்திய நாள் நடைபெற்ற சிலை திறப்பு விழாவுக்கே, பெரியாரை அழைத்த-