பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

395


போதிலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேறு சிலருடன், தாமும் அன்று பங்கு பெற விருப்பமில்லை என்றே, மறுநாள் வந்தார் பெரியார். முதல் நாள் பி.சி. ஜோஷி, காமராசர், பக்தவத்சலம், இராஜாஜி, ம.பொ.சிவஞானம், ஈ.வெ.கி. சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நிதி திரட்டிட 1,000 ரூபாய், 100 ரூபாய் நன்கொடைச் சீட்டுகள் அச்சிட்டதைச் சுட்டிக் காட்டிப் பணக்காரர் ஆதரவு பெருகியிருப்பதாக “விடுதலை செய்தி வெளியிட்டது. அத்துடன், நாட்டில் பணத்திருட்டுகளும், லஞ்சமும், ஊழலும் நிர்வாகத்தில் அதிகமாகியிருக்கக் காரணம், யாவும் பார்ப்பன மயமாயிருப்பதுதான் என்ற பெரியாரின் பெட்டிச் செய்தியும் பிரசுரமாயிற்று. குன்றக்குடி அடிகளார் கிண்டி பொறியியற் கல்லூரியில் உரையாற்றுகையில், பத்திரிகைகள் சோதிடத்தைப் பரப்பி வருவது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்றார். ஜெய்ப்பூர் காங்கிரசில் தலைமை ஏற்ற காங்கிரஸ் தலைவர் காமராசர், உற்பத்தியில் மாநில அரசே பெரும் பங்கு கொண்டு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரியார் பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் தங்கியிருந்தார். “விடுதலை” தலையங்கப் பகுதி பெரியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள கட்சிகளின் தன்மை, அவற்றின் தற்கால எதிர்கால நிலவரம் வரவிருக்கும் தேர்தல், இவை பற்றி “ஜனநாயகம்“ என்ற தலைப்பில் மூன்று கட்டூரைகள். ”சட்டசபை கவுரவம்” என்னும் மகுடமிட்டு, ஜனநாயகம், தேர்தல், சட்டமன்ற நடப்பு இவை நல்லவண்ணம் பாதுகாக்கப்பட்டுப் பயனுடன் நடைபெற, உரிய சில சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று ஒரு கட்டுரை. “ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்“ என்ற புரட்சிகரமான கட்டுரை ஒன்று. பாகிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்; அதற்காக ஒத்துழைக்கிறேன். ஆனால் இந்தியா மீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்! ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்! இங்கு வந்து கம்யூனிசக் கொள்கை பேசியதற்காக, என்னால் ஆதரிக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி அரசால், சிறையிடப்பட்டவன் இன்றுள்ள கம்யூனிஸ்டுகளைவிட, நான்தான் தமிழ்நாட்டில் உண்மையான கம்யூனிஸ்டு - என்றெல்லாம் விளக்கமாக இரு கட்டுரைகள் பெரியார் எழுதினார். இவற்றுக்குச் சில விளக்கங்களை அளிக்க பாலதண்டாயுதம் விரும்பியபோது, அதற்கும் பெருந்தன்மையுடன் வாய்ப்புத் தந்து, அவரது கட்டுரை ஒன்றையும் 26.2.66 ”விடுதலை"யில் பிரசுரிக்கச் செய்தார் பெரியார்.