பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சுட்டுவிட்டதாகச் செய்தி பரவியது. எம்.ஜி.ஆர், பரங்கிமலைத் தொகுதிக்கே செல்ல முடியாமல், மருத்துவமனையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிகளில் இந்தத் தடவை மாணவச் சமுதாயத்தின் பங்கு அதிகமாயிருந்தது. போலிசார் ஆளுங்கட்சிக்கே அனுசரணையாகவும், எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவது கண்டு, கலைஞர் மு. கருணாநிதி மனம் வெதும்பி, மயிலைப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது ’தேர்தல் முடிய இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. ஆறே நாளில் ஆட்சி மாறும். அட்டகாசம் வேண்டாம்‘ என்று எச்சரித்தார். ’என்ன, மிரட்டுகிறாரோ?' என்று பக்தவத்சலம் அலட்சியமாய்ப் பேசினார். தேர்தலுக்கு முதல் நாளிரவு கலைஞரையே தீர்த்துக்கட்டக் காலிகள் முனைந்தனர்.

எப்படியோ? எல்லாருடைய கணிப்புக்கும், எதிர்பார்த்த முடிவுக்கும் முரண்பாடாகத், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின! ‘அய்யோ இவர் தோற்றிருக்கக் கூடாதே!’ என்று அண்ணாவே மனம் வருந்தக், காமராசர் விருது நகரில் தோற்றார். “தமிழர்களுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் போயிற்றே!” என்று: சி.சுப்ரமணியமும், ஆர்.வெங்கட்ராமனும் தோற்றபோது, அண்ணா ஆதங்கம் தெரிவித்தார். கூட்டணி மந்திரிசபை அமையுமோ எனப் பலர் அஞ்சிக் கொண்டிருந்ததும் நடைபெறாமல், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் மிக மிக மோசமாகத் தோற்றது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 137, காங்கிரஸ் 49, சுதந்திரா 20, இடதுசாரிக் கம்யூனிஸ்ட் 11, வலது சாரிக் கம்யூனிஸ்ட் 2, முஸ்லீம் லீக் 3 என்ற முறையில் வெற்றிகள் பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 25, காங்கிரஸ் 3, சுதந்திரா 6, இடது சாரிக் கம்யூனிஸ்ட் 4, முஸ்லீம் லீக் 1 என்பதாக வெற்றிகள் கிடைத்தன.

பெரியாரின் ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஈடு சொல்லவே முடியாது. காங்கிரஸ் தோற்றதில் ஏமாற்றமும், ஆச்சாரியார் கூட்டணி வென்றதில் வருத்தமும் மிகுந்தன! பெரியார்.

"பார்ப்பனர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; பார்ப்பனர் ஆதரவில் பணக்காரரும் வெற்றி பெற்று விட்டனர்.

சோஷலிசம் சமதர்மம் பற்றி நம்மக்கள் கவலையற்றவர்களாக நடந்து கொண்டார்கள்.

எதிரிகளும் பொய்யும் புரட்டையும் ஆயுதமாகக் கொண்டு போராடினார்கள்.

இவைகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் ஆட்சி தெரிந்தோ தெரியாமலோ நல்ல ஆதரவளித்து வந்திருக்கின்றது. தங்கள் தங்களை முக்கியப் படுத்திக்கொண்டு, காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும்