பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

413


என்பது பற்றிக் கவலைப்படாததால் காங்கிரஸ்காரர்களிலேயே மிகப் பெரும்பாலானவர்களுக்கு வேலையில்லாமலேயே இருந்து வந்தது. பொதுவாகக் காமராசர் தோல்வியைத் தவிர, மற்ற தோல்வி எதுவும் எனக்கு அவ்வளவாகக் கவலை தரவில்லை . நமது மக்கள் ஜனநாயக உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்பது எனது வெகு நாளைய கருத்து. இப்போதைய வெற்றியை மாற்ற வேண்டும் என்பதில், இந்த வெற்றியை அளித்த மக்களின் யோக்கியதையைச் சரிவர நிர்ணயிப்போமானால், நாம் ஒன்றும் தனி முயற்சி எடுத்துப் பாடுபட வேண்டியதில்லை.

மற்றும், நம் உயிர்போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறோம். பொதுவாக, இதுபோன்ற பார்ப்பனர் வெற்றி (பார்ப்பனரல்லாதார் தோல்வி) பற்றி எனக்கு இதற்கு முன் மூன்று அனுபவங்கள் உண்டு. மூன்றிலும் பார்ப்பனர் வெற்றி நிலைத்த பாடில்லை. ஆதலால் இன்றைய “பார்ப்பனர் வெற் பற்றியும் ஒன்றும் மூழ்கிப் போய் விடவில்லை என்றே நம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நானும் அதிகக் கவலைப்படவில்லை .

பொதுவாக நம்நாட்டுக்கு இப்படி ஓர் நிலை வரக்கூடும் என்று கருதியே, 1963-ல், காமராசர் தமிழ்நாட்டு முதல் மந்திரி பதவியை விட்டு அகில இந்தியக் கட்சிப்பணிக்குச் சென்றபோதே, நான் கூடாது என்று பத்திரிகையில் எழுதியதோடு, ‘தங்கள் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்’ என்று தந்தியும் அனுப்பினேன்.

அவர் விலகியதன் பயனாகத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுவதுடன், பொறுப்புள்ள ஆட்சி அமைவதற்கில்லாமலே போய்விட்டது. வடநாட்டிலும் பொறாமை, துவேஷம், கோஷ்டி, ஏற்பட இடம் ஏற்பட்டுவிட்டது!

காமராசர் தோல்வியைப்பற்றி, பலர் என்னிடம் வந்து, துக்கம் விசாரிக்கும் தன்மைபோல், தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல் - 1967 பிப்ரவரி 23ந் தேதி தோல்வியைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, 1966 நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில், அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள், என்று சொல்லி அனுப்பினேன். நானும் அப்படியே நினைத்துத்தான் சரிப்படுத்திக் கொண்டேன்!

இனி, நமது வேலை, நமது கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும், அதனால் ஏற்படும் பலாபலன்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டியதுமே நமது கடமையாகும்”