பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


என்று 27.2.1967 “விடுதலை”யின் தலையங்கப் பகுதியில் கையெழுத்திட்டு எழுதினார்.

காங்கிரஸ் தோல்வியைத் தம் தோல்வியாகக் கருதும் பரந்த பெரிய உள்ளம், பிறர் நோயைத் தம் நோயாய்க் கருதும் பேராண்மை, ஈர நெஞ்சம் பெரியாருடையதாகும். இடைக்காலத்தில் பதவியிலிருந்த பக்தவத்சலம், நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன என்றார். அடுத்துவரும் அரசு, பழிவாங்கக்கூடும், என்று பயந்து, கோட்டைக்குச் சென்று சில முக்கியமான இரகசிய ஃபைல்களைக் கொளுத்தி விட்டார் என்றும் அவர்மீது குற்றம் கூறப்பட்டது. சுதந்திராவில் 20 சட்டமன்ற உறுப்பினர் வென்றதாலும், தி.மு.க. ஆட்சிப்பொறுப்பு அனுபவம் பெறாத கட்சி என்பதாலும் ராஜாஜி அன்பர்கள், ராஜாஜி முதல்வராக வரவேண்டுமென அவரிடம் விருப்பம் கேட்டபோது, “அதை அவாள் சொல்ல வேண்டாமோ" என்றாராம். கே. ராஜாராம் வழியாக, இது அண்ணா காதுக்குப் போயிற்று. 6.3.67 அன்று அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை, சென்னை ராஜாஜி மண்டபத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது. நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, ஏ.கோவிந்தசாமி, எஸ். மாதவன், எஸ்.ஜே.சாதிக்பாஷா, மா.முத்துசாமி ஆகியோர் அமைச்சர்கள். 'இந்தி எதிர்ப்பு நீடிக்கும்; கோயில்கள் முதலிய அறநிலையங்கள் பாதுகாக்கப்படும், குடிசை வாழ்வோர் நிலை மேம்படுத்தப்படும். மது விலக்கும் நீடிக்கும்; மொத்தத்தில் நல்ல ஆட்சி நடைபெறும் என அறிவித்தார் புதிய முதலமைச்சர்! பல லட்சம் மக்கள் ராஜாஜி மண்டபத்தருகே குழுமி வாழ்த்து முழக்கினர்.

மதுவிலக்கு நீடிக்கும் என்று பத்திரிகையாளர்களிடையே அண்ணா கருத்தறிவித்ததும், பெரியார் தமது நீண்டகால வலியுறுத் தலான கொள்கையை நினைவு படுத்தலானார், 4.3.1967 “விடுதலை” தலையங்க மூலமாய். “நான் காங்கிரசை விட்டு வந்த பிறகு, சுமார் 30 ஆண்டுகளாகவே, இன்று உள்ள மதுவிலக்குக் கொள்கைக்கு எதிரி! இதற்காக, நான் மதுக்குடங்களைக் காவடி கட்டிச் சுமந்து போகிற மாதிரி, என்னைக் கேலிச் சித்திரம் போட்டுப் பத்திரிகைகளில் கண்டித்து எழுதியுள்ளார்கள். நான் காங்கிரஸ் மது விலக்குக்கு, உள் எண்ணம் கண்டுபிடித்து, “குடி அரசு” இதழில் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதியிருக்கிறேன், நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்!

1938-ல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் பதவிக்கு வந்த போது, நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஓர் ஆதாரம் தேடப்பட்டது. அதாவது 100க்கு 5வீதமே படித்த மக்களாயிருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 100க்கு 7 பேர் படித்த