பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

415


மக்களானோம். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, கல்வியை இன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. அதனால் வரவு செலவைச் சரிக்கட்ட 2.600 பள்ளிகளை (அதுவும் கிராமப் புறங்களில்) மூடவேண்டியுள்ளது அவசியமாகிறது என்று சொல்லியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சாக்கு கண்டு பிடித்துக் கொண்டார். ஆனால் அந்த மதுவிலக்கு அமலுக்கு வந்த நாள் முதல் நாளதுவரைக்கும், அந்த மதுவிலக்குக் காரணமாக, அது ஒரு குடிசைத் தொழிலாக மாறி. இன்று குடிப்பது ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவியிருக்கிறது!

இந்த மதுவிலக்கினால் குடியர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு, இதற்காகக் குடிகாரர்கள் செலவிடும் பணமும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததேயல்லாமல் குறையவில்லை என்பதோடு, முன்பு மதுக்கடைக்குச் சென்று வாங்கிக் குடித்தவர்களுக்கு, இன்று வீடு தேடி வந்து விநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மது உற்பத்தித் தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள், நாணயமில்லாதவர்கள் பெருகி இருக்கிறார்கள். அவர்கள் போலீசுக்கு நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். குடியர்கள் உடல் நிலையோ மிகமிகக் கேடடைந்தும் விடுகிறது.

இன்று ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு’ ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியார், ராஜாஜியைத் திருப்திப்படுத்த, அவருக்குப் பயந்து, மதுவிலக்கைத் தீவிரப்படுத்துவோம் என்று கூறி இருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து, கெட்டு உழல வேண்டும் என்பதுதான் பார்ப்பன தர்மம். எந்த நிலையிலும் பார்ப்பனர் யாருக்குமே நல்லவழி காட்டமாட்டார்கள்!

இந்த மது விலக்குத் துறையில், தேவைப்பட்டவர்களுக்கு எல்லாம் மது கிடைக்கும்படியும், மதுவினால் உடலும் புத்தியும், கெடாதபடியும் இருக்கத் தக்க வண்ணம், அது அனுமதிப்பு ஏற்படுத்தினால், சர்க்காருக்கு நல்ல நிதி வரும்படி ஏற்படுவதுடன், பார்ப்பனர் தவிர்த்த மற்ற சகல துறையிலும் உள்ள மக்களில், நல்ல அளவுக்கு, இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பது உறுதியான வுடனேயே, கழகத் தோழர்களுக்குப் பெரியாரின் நிலை இப்போது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும், ஐயமும் ஏற்பட்டது இயற்கைதானே?-“நான் வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன். அதாவது இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன்” என்றார் பெரியார். ஏன்? காமராஜை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பெரியாருக்குக் காங்கிரஸ்காரர்களைவிட வேண்டியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தானே இருக்கிறார்கள்? பெரியார் அவர்கள் எல்லாரையும் எவ்வளவோ (ரிசர்வேஷன் இல்லாதபடி) திட்டியும், அவர்களில்