பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


யாரும் பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசியதில்லை ஒரு சிலர் சந்திக்க நேர்ந்த போதும் மிகப் பணிவுடனும், பண்புடனும் நடத்திருப்பார்கள். இப்போது மந்திரியாகியிருப்பவர்கள் யாருமே பக்தவத்சலத்தைவிட மோசமாக நடந்து விடமாட்டார்கள் என்று திடமாக நம்பினார் பெரியார்

பெரியாரின் கொள்கையான பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, வகுப்புவாரி உரிமை இவைகளில் எதுவுமே காங்கிரஸ்காரர்களுக்கு உடன்பாடல்ல! ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு உடன்பாடு உண்டு! எதிர்த்துப் பேசியதே இல்லை என்பதும் உண்மை தி.மு.க. தலைவர்கள் பகுத்தறிவுவாதிகள்; மந்திரிகளில் பார்ப்பனர் யாருமில்லை ; பாதிப் பேருக்குமேல் முன்பே திராவிடர் கழகம் - சுய மரியாதை இயக்கங்களில் இருந்தவர்கள்.

தி.மு.க. சோஷலிசத்துக்கு விரோதமாக இருக்காது என்பதால், இப்போத பார்ப்பனருக்குத்தான் இது நெருக்கடியான காலம்; சோதனைக்காலம் எனவே, இந்த மந்திரி சபைக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என்று பெரியார் உறுதியாகக் கருத்துக் கொண்டார். பெரியார் எப்படி எண்ணுவார் என்பது அண்ணாவுக்குத் தெரியாதா?

அரசியலில் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கற்பித்து நாட்டில் வேரூன்றச் செய்த அண்ணா பதவி ஏற்றவுடன், சென்னையில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்று சந்தித்தார்; காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இல்லங்களுக்கும் சென்று சந்தித்தார் அவர் மனம் அமைதி பெறவில்லை ! ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்தபோது, யாரை உளமார எண்ணி உணர்ச்சி வயப்பட்டாரோ, அவர் சென்னையில் இல்லை! திருச்சியிலிருக்கிறார் தந்தை பெரியார் என்று தெரிந்ததும், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய அமைச்சர்களோடும், வெற்றி வாய்பிழந்த அன்பில் தர்மலிங்கத்தோடும், இரவோடிரவாகப் புறப்பட்டுத் திருச்சி சேர்ந்தார்.

செழியன் போன்றார் தடுத்த போது, என்னை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. முதலமைச்சராகியும் நான் அவரைப் பார்க்காவிட்டால், மனிதப் பண்பே ஆகாது என்று கூறினார் அண்ணா.

பெரியாரின் வரலாற்றில் இதுதானே பெரிய வெற்றி அவர் வளர்த்த பிள்ளைகள், அவரிடம் நேரிடையாகப் பயிற்சி பெற்ற தொண்டர்கள், இன்று தமிழகத்தின் முதலமைச்சராக - அமைச்சர்களாக" வீற்றிருக்கிறார்கள். பதினெட்டு ஆண்டுகள் தம்மை விட்டுப்பிரிந்து, விலகிச்சென்று வாழ்ந்தவர்கள், தாம் கண்ணீர்த் துளிகள் என்று தாக்கியதையும், கேலியாகப் பேசியதையும், தேர்தல்களில் எதிர்த்தே பிரச்சாரம் புரிந்ததையும் பொருட்படுத்தாமல், தந்தை மகற்காற்றும் நன்றியாக, நம்மை அவையத்தில் முந்தியிருக்கச் செய்து விட்டார்;