பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கண்டு பயந்து போய் வளைந்து கொடுத்து விட்டேன் என்றும், ‘பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டேன்’ என்றும், இந்த நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லையென்றும் தெரிவித் திருப்பதோடு, சிலகடுமையான ‘பதங்களைப் பிரயோகப்படுத்திக் கீழ்த்தரமான தன்மையில், கையெழுத்தில்லாத கடிதங்கள் மூலமும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.’

இவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை என் மனத்திலும் இதைப்பற்றி எவ்விதக் கலக்கமும் கொள்ளவில்லை ஏனென்றால், இப்படிப்பட்ட சமயத்தில், நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில், யாருடைய யோசனையையும் நான் கேட்க வேண்டு மென்று கருதி இருந்தவனல்ல; அன்றியும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிச் சிந்தித்து நடக்க வேண்டும் என்ற கவலை கொண்டவனும் அல்ல. மற்றென்னவென்றால், இப்படிப்பட்ட சமயத்தில், மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவனென்றும், அதற்கு நான் ஒருவன்தான் நடுநிலைமையாய் இருப்பவன் இருக்க வேண்டியவன் - என்றும் கருதிக் கொண்டு இருப்பவன்! ஆனதால், எனது கருத்தைத் தெரிவித்துக் கொண்டதற்கு ஆக மற்றவர்கள் என்மீது ஆத்திரப்பட்டார்களானால், அதற்காக வருத்தப்படுவதோ, அல்லது என் கருத்தைத் திருத்திக் கொள்ளுவதோ மாற்றிக் கொள்ளுவதோ என்றால், அது எனது பதவிக்கு அழகல்ல என்றுதான் நான் கருதிக் கொள்ள வேண்டும்!

இன்றைய நிலைமை மிகமிக அதிசயமானதும், நெருக்கடியானதும் ஆகும். இராஜாஜி இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது என்ன சொன்னார்? இராமன் குரங்குகளைப் பயன்படுத்திக் கொண்டது போல், நான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். இவர்கள் கைக்கு ஆட்சி வரும்படியாகக் காங்கிரசைத் தோற்கடித்தால்தான், காங்கிரசுக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் வெட்கம் வரும். காங்கிரசுக்குச் செருப்பால் அடித்தது போன்ற அடி கொடுக்க வேண்டுமானால் இவர்களைக் கொண்டு காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொன்னார். அந்தப்படியே காங்கிரசைத் தோற்கடித்து, இவர்களைக் கொண்டு வந்து பதவியில் வைத்துவிட்டார். பதவிக்கு வந்தவர்களும் இராஜாஜியால்தான் பதவிக்கு வந்தோம் என்று கருதி நன்றிமேல் நன்றி தெரிவித்து, ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!

இந்த நிலையில் நமது கடமை என்ன? உட்கார்ந்து கொண்டு, அவமானப்பட்டதாகக் காட்டிக்கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, நாமாக அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதா?