பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தலையை மொட்டையடிப்பதால் ஆள்பாரம் குறைந்து விடுமா?” என்று கேட்டார் பெரியார், “அரிசியை வெளிமாகாணங்களுக்குச் செல்லவொட்டாமல் தடுப்பது, லெவி கொள்முதல் முறையைத் சீர்திருத்துவது, குறைந்த நிலமுள்ளவர்களுக்குக் கிஸ்தியில்லாமல் செய்வது, பஸ் கட்டணம் குறைப்பது போன்றவைகளைச் செய்வது தேவையேயில்லை. அப்படிச் செய்வதானாலும் நிதானமாக, ஆழ்ந்து யோசித்துச் செய்ய வேண்டும்.

அரிசி நிலவரி முதலிய பிரச்சினைகள் இயற்கைப் பிரச்சினைகளல்ல; செயற்கைப் பிரச்சினைகள். அதனால் இவற்றை நம்பியே வெற்றியைக் கணித்துக் கொள்ளக் கூடாது. உத்தியோகம், பதவிகள் அளிப்பதில் பக்தவத்சலத்தை முன் மாதிரியாகக் கொள்ளக்கூடாது; இனநலம் மறக்கக் கூடாது.”

இன்றைக்குத் தங்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆரவாரத்தையும் நம்பி, மந்திரிகள் ஏமாந்து விடக்கூடாது என்றார் பெரியார், விபூதி வீரமுத்துவுக்கு ஒரு காலத்தில் இருந்த பெருமை என்ன? இன்றைக்கு ஒரு கிருபானந்த வாரியார் சுவாமிக்கோ, சங்கராச்சாரிய சுவாமிக்கோ இருக்கிற பெருமை என்ன? இதெல்லாம் நிலையானதா என யோசிக்க வேண்டும். சிபாரிசுகள், இலஞ்சங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எதுவாயிருந்தாலும் மந்திரிகள் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வதாகவும், தங்கள் மீது தவறில்லை என்றும் பெரும்பான்மையான மக்களுக்குக் காட்டிக் கொள்வதுடன், அறிவாளிகளாகச் சிந்திக்க வேண்டும் - என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாகப் பெரியாருக்குக் கடினமான வேலை ஒன்று காத்திருந்தது. அதாவது அதிருப்தி கொண்டுள்ள தமது தோழர்களுக்குத் தொடர்ந்து சில சான்றுகள், ஆதாரங்கள் காட்டித் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால், திராவிடர் கழக-சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது, என்று நிரூபிக்க வேண்டும். அதற்காகப் பத்திரிகைகளை - நல்லவண்ணம் துருவித்துருவிப் படித்து வந்தார் பெரியார்!

மந்திரிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது கீதை, இராமாயணம், குரான், பைபிள் போன்ற நூல்கள் பக்கத்திலிருந்தும் அவற்றைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அறநிலைய மந்திரி உள்பட அனைவரும், ‘மனப்பூர்வமாக’ என்றே பதவிப்பிரமாணம் செய்தார்களே, என்று பத்திரிகைகள் அங்கலாய்த்தன. இது பெரியாருக்கு ஆதரவான முதல் சான்று! அடுத்து, தேர்தல் நேரத்தில் இராஜாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தினரைத் தமது இனத்தாருக்கு அறிமுகப்படுத்தும் போது, இவர்கள் தி.க. வாசனையை அடியோடு