பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

421


கழுவிவிட்டு வந்தவர்கள் என்றாரே. அது பொய்யென்று இந்த மந்திரிகள் பதவி ஏற்ற நாளிலிருந்தே தெரிய ஆரம்பித்து விட்டது. இரண்டாவது சான்று பெரியாருக்கு ஆதரவாக! மூன்றாவதாக, நீங்கள் தாம் திராவிடர் கழகத்தை விட்டு வந்தவர்களாயிற்றே; திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக, தர்ம முன்னேற்றக் கழகம் - அப்போதும் D.M.K. தானே என்று பெயரை மாற்றச் சொன்னதற்கு இணங்கவில்லை இவர்கள்! நான்காவதாக, உங்கள் கொடியில் எதற்குக் கருப்பும் சிவப்புமாக இரு நிறங்கள்? பேத உணர்ச்சி எங்களுக்குக் கிடையாது என்று காட்ட, ஒரே நிறத்தில் கொடியை மாற்றி விடுங்களேன்-என்ற பார்ப்பனர் ஆலோசனைகளை தி.மு.க. அலட்சியப்படுத்தியது.

இப்போதைக்கு இந்தச் சான்றுகளே போதும் என்று பெரியார் எடுத்துக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சிறிதளவு நன்மை செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் பெற வேண்டும். கோர்ட்டில் வாதாடுகிறபோது வழக்கின் தன்மை ஒரு மாதிரியாக இருக்கும். பஞ்சாயத்தாரைக் கொண்டு ராஜி பேசுகிறபோது, வழக்கின் தன்மை வேறு மாதிரியாகத்தானே இருக்கும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் - என்றார் பெரியார்.

அடுத்து இரண்டொரு நாட்களுக்குள், பெரியாருக்குத் தமது கருத்தை வேடிக்கையாகச் சொல்ல இன்னொரு வாய்ப்பைத் தந்துவிட்டார். பொதுப்பணி, போக்குவரத்து, வீட்டுவசதித் துறை அமைச்சரான கலைஞர் மு.கருணாநிதி, பெரியாரின் 16.3.1967 “விடுதலை” தலையங்கத்தின் ஒரு பகுதியே விவரங்களை விளக்கும்:"அட பாவமே! மந்திரி கலைஞர் கருணாநிதி தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டுவிடுவேன்!' என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அநாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியிலே மாட்டிக் கொள்ள வேண்டும்? அப்துல் காதருக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?

ஒழுக்கம் - நாணயம் கெட்டால், நீதி கெட்டால், நம்பிக்கை கெட்டால், நன்றி கெட்டால் என்பது போன்ற மனிதத்தன்மை எங்களிடம் இல்லையானால், எங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், பதவியை விட்டுவிடுவேன்- (ஏன்) உயிரையும்கூட விட்டு விடுவேன்என்று கூறலாம்! கப்சாவும் விடலாம்! அதை விட்டுவிட்டு, தமிழைக் காப்பாற்றாவிட்டால், அதற்குக் கேடு வந்தால் பதவியை விட்டு விடுகிறேன் என்றால், அதற்கா மக்கள் ஓட்டுக் கொடுத்தார்கள்? ஒவ்வொன்றுக்காகவும் மந்திரி பதவியை விட்டு விடுவேன் என்றால், அப்படி ஒரு மனிதனுக்கு எத்தனை மந்திரி பதவி இருக்கிறது?

நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம்.