பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்து கொண்டவுடன், தி.மு.க. ‘நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டோம். என்று சொல்லித், தேர்தலுக்கு நின்று, இன்று ஆட்சிக்கும் வந்துவிட்டார்கள்! தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சினை ஆகிவிட்டதால், அவர்கள் அதைப் பற்றிப் பேச்சு மூச்சுக்கூட விடக்கூடாத நிலையில் இருக்கிறார்கள்!

மத்திய அரசாங்கம் காங்கிரசார் கையிருப்பதால், அவர்களுக்குப் பயந்து கொண்டு, அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல், நாங்கள் திராவிட நாடு பிரச்சினையைக் கைவிட்டு விட்டோம். விட்டுவிட்டோம். விட்டே விட்டோம்!’ என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள். நாமோ தேர்தலுக்கு நிற்கிறவர்கள் அல்ல. ஆனாலும், நமது திராவிடர் கழகத்தில் அது (திராவிட நாடு பிரிவினையே) ஒரு கொள்கையாய் இருந்தாலும், காமராஜர் காங்கிரஸ் தலைவரானவுடன், சமதர்மம் - சோஷலிசம் காங்கிரசின் கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டதால், அது தக்கபடி அமுலுக்கு வந்தால், திராவிட நாடு பிரச்சினை அவசியமாக இருக்காது - அல்லது கூடாததாய் இருக்காது என்று கருதி, அதிகமாய்ப் பிரஸ்தாபிக்காமல் இருந்தோம்.

என்றாலும், காங்கிரசின் பலக்குறைவையும், பார்ப்பனரின் கட்டுப்பாடு பலத்தையும் பார்க்கும் போது, சோஷலிச அமுலுக்குத் தொல்லை ஏற்படும் என்று பயப்பட வேண்டியிருப்பதால், இப்போது திராவிட நாடு பிரச்சினையைப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் அவசியமென்றே தெரிகிறது.

இந்தியாவில் சோஷலிசத்திற்கு அனுகூலமானவர்கள் முழுமூச்சுடன் பாடுபடுகிறவர்கள் எத்தனை பேர் என்றே கணக்கிட முடியவில்லையே! மொழி பேதத்தால் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ள முடிவதில்லை. கலாச்சார பேதத்தால் நாம் ஒரு நாட்டு மக்கள், சகோதரப் பிரஜைகள் என்கின்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. கூட்டுப் பொறுப்பு என்பதே எதில் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை!

நான் தமிழ் நாட்டில், கிராமம் பட்டி தொட்டி முதலிய எல்லா ஊருக்கும், எல்லா மக்களுக்கும், தெரிந்தவனாக இருந்தாலும், கேரளாவில், வைக்கம் கிளர்ச்சியில் தெரிந்து கொண்டதால், ஒரு 5,000 பேருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். கர்நாடகத்தில், பெங்களூரில், சில ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். ஆந்திராவில் ஒரு சிலர் இருக்கலாம். பிறகு, மற்ற நாடுகளில் என்னைத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? 55 கோடி இந்திய மக்களில் 55 ஆயிரம் வெளி மாநில மக்கள் தவிர, மற்றவர்களுக்கு நானே தெரியாதவனாக இருக்கும்போது, இந்தியா எப்படி ஒரே நாடாக இருக்க முடியும்? இந்திய மக்கள் எப்படி ஒரே சமுதாய மக்களாக