பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

427


செய்தியாகப் பிரசுரித்தது:- “சுதந்திராவுடன் தி.மு.க. குடும்ப வாழ்க்கை நடத்துவதாகத் திரு. அண்ணாதுரை கூறுகிறார். ராஜாஜியோ (சுதந்திரா) மனைவியின் (திமுக) நடத்தை சரியில்லை என்கிறார். நடக்கட்டும் கதை; ஊர் சிரிக்கிற வரை” என்று!

லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் ஒரு நாள் பேசும்போது தி.மு.க. உறவு பற்றி ராஜாஜி குறிப்பிட்டார்- இராமன் சொன்னான் சீதா தான் உன்னை மீட்பதற்காகப் போரிடவில்லை; இராவணனை அவமானப்படுத்தவே போரிட்டேன் என்று. அது போல “நான் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தப் பாடுபடவில்லை; காங்கிரசை (காமராஜை) ஒழித்து அவமானப்படுத்தவே பாடுபட்டேன். அதில் ஜெயித்தேன்” என்றார். இதை எடுத்தாண்டு, “விடுதலை” ஏளனம் செய்தது!

பெரியார் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, மந்திரிகள் பயபக்தியுடன் எதிரில் நிற்க, ராஜாஜி மெதுவாய் எட்டிப் பார்க்க, ‘சுதேசமித்திரன்’ கார்ட்டூன் போட்டது; “நானிருக்க பயமேன்?“ என்று தலைப்பு! இதையும் - ராஜாஜி. “எனக்கு இந்தக் கண்ட்ரோலைக் கண்டால் பிடிக்காது”; அண்ணா - ”அதனாலேதான் என் மேலே உங்களுக்கு இருக்கிற கண்ட்ரோலை கொஞ்சம் கொஞ்சமா எடுத்திட்டு வாரேன்“ என்பதாக ‘ஆனந்த விகடன்’ வெளியிட்ட கார்ட்டூனையும், “விடுதலை” வெளியிட்டு, அவாள் உள்ளத்தை எக்ஸ்ரே படம் பிடித்துக் காட்டிற்று!

9-ந் தேதி திருச்சிக் கமிட்டிக்கு முன்பும், பெரியார் “விடுதலை”யில் தொடர்ச்சியாகச் சில தலையங்கப் பகுதிக் கட்டுரைகள், ஆட்சியாளர்க்கு அறிவுரைகளாகத் தீட்டி வந்தார்:- “இது பகுத்தறிவாளர் ஆட்சி என்பதால் கூறுகிறேன். நான் சமதர்மவாதிதான் என்றாலும், முதலில் பகுத்தறிவுவாதி! பத்திரிகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சர்க்கார் தரும் அதிகார பூர்வமான செய்திகளை, இன்ன மாதிரியான முறையில் பிரசுரிக்க வேண்டும் என்பதாக உத்தரவிட வேண்டும். உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க மக்கள் உணவுப் பழக்கத்தை மாற்றும்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். சர்க்காரே உணவுப் பண்டங்களை (ரொட்டி போன்றவை) மலிவு விலையில் தயாரிக்க வேண்டும். கல்வியில் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி போதும். அல்லது பி.யூ.சி. வரை கொடுக்கலாம். எதற்காக நிலவரியை ரத்துச் செய்ய வேண்டும்? அவசியமில்லை. உயர் படிப்புகளைக் கல்லூரியில் உட்படத் தமிழில் ஆக்கப் போகிறோம் என்கிறீர்கள் இது கூடாது. நம்மைத் தமிழும் இந்தியும் படிக்கச் சொல்லிவிட்டுப், பார்ப்பானும் பணக்காரனும் இங்கிலீஷ் கான்வென்டில் படித்து மேலே போய்விடுவார்கள்! பிறகு நம் கதி என்ன? அதனால், இங்கிலீஷ் இப்போது உள்ள நிலையிலிருந்து, எந்த மாற்றமும் செய்து விடாதீர்கள்" என்பதாக.