பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

431


இடிந்து விழும் மாடிக் கட்டடம் போல், சாய்ந்து விழுந்து வருகின்றன. அதாவது பார்ப்பான் என்பதாலோ, பணக்காரன் என்பதாலோ, பெரிய மனிதன் என்பதாலோ நாட்டில் இன்று எவருக்குமே பெருமையோ, மரியாதையோ இல்லாமல் போய்விட்டது!

பகுத்தறிவு வளர்ச்சித் தன்மைதான் சமதர்மக் கொள்கைக்கு மக்களை இழுத்துச் சென்றது என்றாலும் இன்று சமதர்மத்தை எதிர்க்கக்கூட அதே பகுத்தறிவு வளர்ச்சிதான் அதாவது எதையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஆகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்றைய சுதந்திர ஜனநாயகத்தால் -ஜனநாயக ஆட்சியில் - உண்மை சமதர்மத்தை அமுல் படுத்துவது ஒரு நாளும் முடியாத காரியமாகத்தான் இருக்கும். யார், எவ்வளவு பாடுபட்டாலும், வெள்ளரிப் பழத்திற்குப் பூண் (கட்டு) போடும் காரியமாகத்தான் முடியும்! இதைச் சமாளிக்க வேண்டுமானால், சுதந்திர ஜனநாயக ஆட்சியால் முடியாது; இரும்புக்கை அடக்கு முறை ஆட்சியால்தான் முடியும்! இந்த நிலையில், இனியும் சமதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுவதென்றால், தர்மத்தின் பேரால் வண்டி ஓடினவரை ஓடட்டும் என்பதல்லாமல், அதில் உண்மை என்ன இருக்க முடியும்?

இந்த நிலையில், உண்மையான சமதர்மவாதிகள், சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக்கொண்டு, பொதுவுடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயன்றால், பயன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். ‘பொது உடைமை’ என்பது பகுத்தறிவின் எல்லையாகும்!

எனது சமுதாயத்துறை சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கை இனியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால், அது பொதுவுடைமைக்கு நல்ல வண்ணம் பயன்படலாம்".

மேதினத்தன்று பெரியார் வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசினார்; - “காங்கிரசை விட தி.மு.க. தேவலாம். நமது தோழர்கள் அவர்களிடம் அன்புடன் பழகவேண்டும். எந்தக் காரணத்தாலோ நமக்குள் தகராறு இருந்தது, இப்போது போச்சு. போச்சு என்றால் போனதுதானே? பிறகு என்ன?“ என்று கேட்டு முடித்தார் பெரியார். “கம்யூனல் ஜி.ஓ.வை அந்தந்த மந்திரிகளே தமது இலாக்காவில் அமுல் படுத்தத் தொடங்கலாமே! தி.மு.க. ஆட்சி என்ன, வைதிக ஆட்சியா? இதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?” என்றும் “ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவது தவறு. மிகுந்த நட்டம் ஏற்படும், சிந்தித்துச் செயல்பட வேண்டும். இந்த அரிசிவிலைக் குறைப்பே ஒரு நியூசென்ஸ், அநாவசியத் தொல்லை” என்றும்