பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஒரு நாள் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது விழுந்து, பலத்த காயத்தை உண்டாக்கி விட்டது. தம்மைத் திட்டிக்கொண்டே, தாக்கத் துரத்திய அய்யரைப் பார்த்து, இராமசாமி, “இது தலைவிதிப்படி நடந்தது; எல்லாம் அவன் செயல்” என்று பதிலடி கொடுத்தார்.

இவ்விதம், இயல்பாகவே இவரிடம் இம்மாதிரியான அறிவார்ந்த பண்புகள் நிரம்பியிருந்தன. தாராளமாகவும், அஞ்சாமலும், தயக்கமின்றியும் வாதமிடும் துணிவு இருந்தது. தம் வீட்டில் நடைபெறும் மத நம்பிக்கைக் காரியங்கள் யாவுமே பொருளற்றவை; சடங்குகள் அர்த்தமில்லாதவை; செலவுகளெல்லாம் வீணானவை என்று இவர் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து வந்தார். சாதி வேறுபாடுகளால் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளும், இவரது உள்ளத்தில் ஆழப் பதிந்ததால், அவை குறித்தும், இவர் தமது எண்ணத்தைத் தீவிரமாய்ச் செலுத்தி வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இராமசாமி தமது வாணிபத் தொடர்பிலும் மேலோங்கி வளர்ந்து வந்ததால், பெற்றோர் இவரை வெறுத்தொதுக்க இயலவில்லை. இராமசாமிக்கு இப்போது பதினெட்டாண்டுகள் முடிந்து, பத்தொன்பது வயது தொடங்கிற்று.

இந்தக் கால கட்டத்தில் தமது தந்தையார்க்கு இருந்து வந்த சமுதாயநிலை என்ன என்பதைப் பின்னாட்களில் ஈ.வெ.ரா. இப்படி எடுத்துக் காட்டுகிறார்: - “முன்பு எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி. சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 12 ரூபாய் 15 ரூபாய் மாதச்சம்பளம் வாங்கும் முனிசிபல் பில்கலெக்டர் - பார்ப்பனன் வரிவிதிப்பு விஷயமாக ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்துப் பைசல் செய்ய மண்டிக்கடைக்கு வந்து கூப்பிட்டான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து “ராவால் ராவால தேவுடா (வரவேணும் வரவேணும் ஸ்வாமி)” என்று இருகை கூப்பிக் கும்பிட்டு, உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டேயிருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்துகொண்டு “ஏமிரா வெங்கட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேதானிக்கு (ஏண்டா வெங்கட்ட நாயுடு அந்த வீட்டைப் பார்க்கப் போகலாமா?)” என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆஹா என்று சொல்லி அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டுவிடுவார்.

ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தவுடன், மஞ்சள் மிளகாய் கருப்பட்டி வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி ஒரு பையனிடம்