பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

441


யாரோ வெட்டித் துண்டாக்கிவிட்டனர் என்று கேள்வியுற்று, முதமைச்சர், வருந்தித் தந்தி அனுப்பியதாகவும் “விடுதலை” செய்தி வந்தது. ஆனைமலை தோழர் ஏ.என். நரசிம்மன் அவர்களின் மறைவுக்கு அனுதாபந் தெரிவித்து, நாடெங்கிலும் உள்ள திராவிடர் கழகக்கிளைகள் நிறைவேற்றி அனுப்பிய இரங்கல் தீர்மான விவரம் “விடுதலை" யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது.

15.8.67 அன்று, சென்னைக் கடற்கரையில், திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில், பெரியார் சமதர்மம் பற்றிப் பேசிவிட்டு “நாம் எதில் இன்று விடுதலை பெற்றிருக்கிறோம்? நான் அரசியலின் பெயரால் துன்பப்பட்டவன். நட்டப்பட்டவன். மானத்தையும் பறி கொடுத்தவன். மந்திரி பதவியை உதறித் தள்ளியவன். ஆதனால் எனக்கு இந்த இழி வாழ்வு வெறுப்பாகத் தோன்றுகிறது“ என்றார் பெரியார். “சில இடங்களில் தி.மு.க. - காங்கிரஸ் மோதல்கள் இன்னும் நடந்து வருவதாக எனக்குச் சேதிகள் வருகின்றன. தலைவர்கள் . இவற்றைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சில்லுண்டிகள் சில்லரைத்தனம் செய்யலாம். அதை லட்சியம் செய்ய வேண்டாமென்று தலைவருக்கு (காமராஜருக்கு) விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்” என்று முடித்தார். நாட்டில் காலித்தனம் அதிகரித்து விட்டது என்று “விடுதலை”யில் ஒரு தலையங்கமும் எழுதினார்.

மூன்றாம் முறையாகப் பெரியார் உடல் நலங்குன்றி, சுந்தரவதனம் நர்சிங்ஹோமில் 23.8.67 அன்று சேர்க்கப்பட்டார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியமும் கவனித்து வந்தார். எம்.ஆர். ராதாவின் இரு மகள்களுக்குச் சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவுக்கு, மருத்துவர்களின் அனுமதியுடன், பெரியார் 26-ந் தேதி சிறிது நேரம் சென்று, தலைமை ஏற்றுத் திரும்பினார். எம்.ஆர்.ஆர். வாசு வரவேற்றார். கி. வீரமணி, திருவாரூர் தங்கராசு, சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி, பாலதண்டாயுதம், ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன் - மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். மருத்துமனையிலிருந்த பெரியாரை 6.9.67 அன்று அமைச்சர் மாதவனும், அன்பில் தர்மலிங்கமும் சென்று பார்த்தனர். 7ந் தேதி வடசென்னையில் லோட்டஸ் ராமசாமியின் மகன் திருமணத்தையும் நடத்தி வைக்க, மருத்துமனையினின்று சென்று வந்தார். ஓரளவு நலம் பெற்று 9-ந் தேதி திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார் பெரியார். மருத்துவமனையிலிருந்து கொண்டே “விடுதலை”க்குப் பெட்டிச் செய்திகளும், தலையங்கமும் எழுதுவதை நிறுத்தவில்லை.“ வேலியில் போகிற சுக்குட்டியைக் காதில் விட்டு கொண்டு குடையுது குடையுது என்கிற கதை” என்பதாக ஒரு பெட்டிச் செய்தி! இது பதவி கிடைக்காததால் சலிப்புற்ற ம.பொ.சி பற்றியது. இன்றைய காங்கிரஸ் நிலை பற்றி