பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

470

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சமர்ப்பணம்! “காங்கிரசின் போக்கு இப்போது சரியில்லை. காலமெல்லாம் சமுதாய சாதி வேறு பாடுகளை ஒழித்துக்கட்ட வாழ்நாள் முழுதும் போராடி வரும் பெரியாரின் அருந்துணையைக் காங்கிரஸ் பெற வேண்டும்“ என்று மெயில்” பத்திரிகையே எழுதிற்று. “பசுவதையும் டெல்லி அரசும்” என்று 10.5.68 “விடுதலை” யில் ஒரு தலையங்கம், அப்போதைய நிலையை விளக்கிற்று. முதல் முறையாகத் தமிழக அரசின் விளம்பரம் ஒன்று 14.5.68 அன்றைய “விடுதலை” யில் ஒருநாள் மட்டும் காணப்பட்டது புதியதோர் அதிசயமாகத் தெரிந்தது! அறிஞர் அண்ணா மேல், கீழ் நாடுகளின் சுற்றுப் பயணத்திலிருந்து 12ந் தேதி இரவு 10 மணிக்குத் திரும்பினார். மறுநாள் கடற்கரை மணற்பரப்பில், “உலகெங்கும் தமிழர் என்கிற உணர்வு பெருக்கெடுத்து ஓடக் கண்டேன், எங்கள் இரு மொழிக் கொள்கையிலிருந்து என்றும் பிறழவே மாட்டோம்“ என்றார் அண்ணா! வாகை சூடிய வீரரை வரவேற்கிறோம் என “விடுதலை” எழுதியிருந்தது.

மத சம்பந்தமான பண்டிகைகளுக்கு விடுமுறை விடும் பழக்கத்தை அண்ணாவின் ஆட்சி நிறுத்தவில்லை. இது பெரியாரின் பகுத்தறிவு உள்ளத்தை உறுத்தியது. “தமிழன் (திராவிடன்) காட்டு மிராண்டிதான்!“ என்று கட்டுரை உதயமாயிற்று 18.5.68 ”விடுதலை“ தலையங்கப் பகுதியில். ”தி.மு.க. வின் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை. இந்தக் கொள்கையின்படியே நடப்பார்கள் என்று நம்பியே மக்கள் இவர்களுக்கு வோட்டளித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, தி.மு.க. ஆட்சியே, உனக்கும் பப்பே உங்க அப்பனுக்கும் பப்பே என்ற கதை போல நடந்து கொள்ளலாமா? தி.மு.க. மந்திரிகள் தங்கள் பதவிகளைப் பிரதானமாகக் கருதுகிறார்களே ஒழிய, கொள்கைகளையோ, வோட்டளித்த மக்களது நம்பிக்கைகளையோ இலட்சியம் செய்யாமல் துரோகந்தான் செய்து வருகிறார்கள் என்று சொல்வதற்கு நான் மிகுதியும் துன்பப்படுகிறேன்“ பெரியாரின் வேதனையும் வெந்த உள்ளமும் வெளியாகிறதல்லவா? “சூத்திரன் படித்த மேதாவியானாலும் பிராமணனுக்குச் சமமாக முடியாது என்று சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு உள்துறை அமைச்சர் சவான் ஆத்திரப்படுகிறார். சட்டத்தினால் இதற்குப் பரிகாரம் தேட முடியாது; மக்கள் மனம் மாற வேண்டும் என்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இங்கே மூடநம்பிக்கை ஒழிப்பு இலாகா என ஒன்று உண்டாக்க வேண்டும். திருக்குறளுக்குப் பதில், பாரதிதாசன் பாடல்கள் பாட புத்தகங்களில் இடம் பெற்றால் ஐந்தாண்டு அறிவை ஓராண்டில் பெற்றுவிடலாம். சமுதாயத்துக்குப் பயன்படும் காரியங்களைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருக்கமாட்டோம் என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார். எனவே அரசினரின் கல்வி இலாகா இதைப்பற்றி நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும்” என்று அடுத்த நாள் தலையங்-