பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

489


தமிழ் மக்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டனர். காஞ்சியிலுள்ள தமது வயது முதிர்ந்த தாயார் பங்காரு அம்மாளைக் காண, மறுநாள் காஞ்சி சென்று, தங்கினார் அண்ணா. "விடுதலை" அண்ணாவை வாழ்த்தி வரவேற்றது. மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெரியார் 90-வது பிறந்த நாள் விழாவில், பிரதமரின் அரசியல் துறைத் தனிச் செயலாளர் யாப்சின்குவீ கலந்து கொண்டு சிறப்பித்தார். கேரள மாநிலத்தைப் தனியாகப் பிரிக்க வேண்டுமென்றும், இந்தியைக் கேரளாவில் திணிக்கக் கூடாதென்றும் கோரிக்கைகள் எழுந்து, தமிழ்நாட்டுக் காற்று அங்கும் வீசத் தொடங்கியதை உணர்த்திற்று. "விடுதலை" முன்னாள் துணையாசிரியர் பூ.கணேசன் தமிழ்நாடு குடும்பநலத் துறையின் துணை இயக்குநர் என்னும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அண்ணாவின் அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்ட அந்நியச் செலாவணி எவ்வளவு என நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேள்விக்கு, நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் 8,165 டாலர் (61,000 ரூபாய்) என அறிவித்தார். (இந்த ரூபாயை அரசுக்குத் தி.மு.க. கட்சியே செலுத்திவிட்டது)

11.11.68 அன்று அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்குப் பெருமதிப்பிற்குரிய பெரியார், மணியம்மையார், வீரமணி ஆகியோர் சென்று, அண்ணாவைக் கண்டனர். "நான் வந்து அய்யாவைக் காண இருந்தேன். அதற்குள் தாங்கள் முந்திக் கொண்டீர்களே" என்று கூறியவாறு, அண்ணா பெரியாருக்கு ஆப்பிள் ஒன்றை வழங்கினார்.

நாகர்கோயிலில் நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த மார்ஷல் நேசமணி காலமானதை அடுத்து, அங்கே இடைத்தேர்தல் வர இருந்தது. காமராஜர் நிற்கப்போவதாகச் செய்தி பரவிற்று. “நின்றால் ஜெயித்து விடுவாரே! ஜெயித்தால் மத்திய மந்திரி ஆகிவிடுவாரே என்று இராஜாஜி அங்கலாய்க்கிறார். ஜுரமே வந்துவிட்டது இவருக்கு! ஆனால் நமது கருத்து அவர் மத்திய மந்திரியாவதால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் லாபமில்லை. அவருடைய உழைப்பு தமிழ் நாட்டுக்குத்தான் தேவை" என்று பெரியார் தமது எண்ணத்தை இயம்பினார். “தமிழர் நிலை மாறவேண்டுமானால் நம்மைக் கைதூக்கி விடுவதற்கு ஏற்ற மாதிரிக் கலைகள் நம்மிடமில்லை . நம்முடைய கல்வியில் பகுத்தறிவுக் கருத்துகளைப் புகுத்த வழியில்லை. கிராம உத்தியோகஸ்தர்களும் போலீசின் அடிமட்டத்துச் சேவகர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட வேண்டும். ஐகோர்ட் ஜட்ஜ்களை வக்கீல்களிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடாது. படிப்படியாக உயர்வு பெற்றுத்தான் வர வேண்டும். நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கக்கூடாது. அதுவும் ரெவின்யூ இலாகாவின் கீழ் நிலையிலிருந்து பதவி உயர்வு தரவேண்டும். எல்லா நிலையிலும், கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் ஆக்கப்பட வேண்டும். அவையெல்லாந்தான்