பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


உண்மையான முன்னேற்றத்துக்கு வழிகளாகும். துருக்கி நாடு பழைமைப் பிடிப்பில் சிக்கிக் கிடந்த போது எப்படி இருந்தது? கமால் பாட்சாவின் புரட்சிகரமான சீர்திருத்தம், ஐரோப்பியரோடு வித்தியாசம் காண முடியாதபடி துருக்கியரை நாகரிகப்படுத்தி விட்டது. அதேபோல நமது பிள்ளைகளையும் இளமையிலிருந்தே பழக்க வேண்டும். தமிழில் பேசக் கூடாது. கையால் சாப்பிடக் கூடாது. வேட்டை சட்டை புடவை எல்லாம் மாற்றி, ஆங்கிலேய முறை உடை உணவு மொழி ஆகியவற்றுக்கு மாறுதல் செய்யப்படவேண்டும்" என்றெல்லாம் நவீனக் கருத்துகளைப் பெரியார் வலியுறுத்தினார்.

"மதுவிலக்கு என்பது இமயமலை அளவு முட்டாள்தனம். காந்தியாரின் காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளில், வெற்றி பெறாத ஒன்றாகும் இது. மது விலக்கால் எந்தப் பயனும் கிடையாது. இதனால் தொழிலாளரின் தேசிய சக்தி (Energy ) தான் குறைந்து போய்விட்டது. காங்கிரஸ்காரர்களைக் கெடுத்துப் பதவியிலிருந்து விரட்டியது போலவே இந்த மதுவிலக்கு இவர்களையும் கெடுத்து விரட்டிவிடுமோ என்றே நான் பயப்படுகிறேன்" என்று பெரியார் ஒரு தலையங்கத்தில் அச்சந்தெரிவித்தார். பூம்புகாரில் கண்ணகிக் கோட்டம் எழுப்பும் செய்தி கேள்வியுற்று "பத்தினி பதிவிரதை" என்று 11.11.68-ல் பெரியார் தலையங்கத்தின் வாயிலாகச் சீற்றம் தெரிவித்தார்:-"இடித்தொழிக்க வேண்டிய கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய சின்னங்களாகக் கொள்ளுவதும், கண்ணகிக்குக் கோயில் கட்டுவதும், முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான முதல் பணி என்றால், இந்தப் பரிதாபத்திற்குரிய தமிழர்களின் எதிர்காலம் என்ன ஆவது? மாண்புமிகு கருணாநிதி அவர்களை மனம் மொழி மெய்களால் பாராட்டுகிறவன் நான்.ஆனால் கம்பன் கண்ணகி பாரதிகளுக்குச் சிலைகள் வளர்ந்து கொண்டே போனால், கையும் மெய்யும் சகித்தாலும் மனம் சகிக்க மாட்டேன் என்கிறதோ இந்தச் சிலைகள் எழுப்புவதிலுள்ள அக்கறை தன்னுடைய சிலை விஷயத்தில் மாறுபட்டு, செய்த சிலை மூலைக்குப் போய் விட்டதே!” என்று,

8.11.68 அன்று பெரியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொதுப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பேருரை ஆற்றினார். துணைவேந்தரான டாக்டர் எஸ். பி. ஆதிநாராயணன் தலைமை ஏற்றார். பெரியார் மாணாக்கருக்கு அறிவுரைகள் வழங்கினார்:- “எந்தக் காரியமானாலும் ஏன் எதற்கு எதனால் என்று சிந்தியுங்கள். கலவரம் செய்வதும் காலித்தனம் விளைப்பதும், மாணாக்கர் இங்கு அறிவுப் பெருக்கத்திற்காக வந்துள்ள பெரிய ஒரு இலட்சியத்திற்கே கேடானதாகும். நம்முடைய கடவுள் மதம் இவை யாவும் மக்களை மடையர்களாக்கவே பயன்படுகின்றன. அவற்றை அறவே ஒழித்துக் கட்டுங்கள்” என்று பேசினார் பெரியார்.