பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

493


வேண்டும். கவுண்டர்- செட்டியார் கலப்புத் திருமணம் என்று பயந்து விட்டார்கள். செட்டிநாட்டில் நான் நடத்திய எத்தனையோ கலப்புத் திருமணங்களில் ராஜாவும் கலந்து கொண்டாரே!" என்று எழுதினார்.

14.12.1968 அன்று, சிறுநீர் இறங்குவதில் தொல்லை ஏற்பட்டதற்காகப் பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்து, 28ந் தேதி மாலை இல்லத் திரும்பி, 13ந் தேதி முதல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அண்ணா 21ந் தேதி கோட்டை சென்றிருந்து, டெல்லியில் திட்டக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார். மற்ற சிற்றூர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டான கழகக் கோட்டையான இடையாற்று மங்கலம் தோழர்களிடையிலும், சிறிது சுய நலம் தலை தூக்கவே, அங்கே, சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு வழங்கப் பெற்றிருந்த சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று எழுந்தது. திருச்சி வழக்குரைஞரும், நீண்ட நாள் கழகத் தலைவருமான தி.பொ. வேதாசலம், எதிர் தரப்பில் சாட்சி கூறும் அவலத்தை நாடு கண்டது. ஆனால் வழக்கு, கழகத்துக்கே வெற்றியாய் முடிந்தது 23.12.68 செய்தியின்படி!

மருத்துவமனையில், வாய் சும்மாயிருந்தாலும் பெரியாருக்குக் கை சும்மாயிருக்குமா?: "நாகர்கோயில் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவரால் தமிழ் மக்களுக்கு அளவிட முடியாத நன்மைகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கு, நான் தி.மு.க. வுக்கு ஒன்றும் உதவி செய்திடவில்லை . ஆனாலும், அவர்களுக்கு இராஜாஜியைத் திருப்திப்படுத்துவது எப்படி சுடமையாக இருக்கிறதோ அப்படியே தி.மு.க.வுக்கு ஞாபகப்படுத்துவதும் என் கடமையாக இருப்பதால், சொல்லுகிறேன்" என்று தலையங்கமே தீட்டினார். “நமது பிற்படுத்தப்பட்ட மக்கள் சீக்கிரம் படித்து முன்னேற, 4-வது வயதிலிருந்தே படிப்பு தொடங்கவும், கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமுல் செய்யவும், பகுத்தறிவின் அடிப்படையில் பாடத்திட்டங்களை அமைக்கவும் நமது முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் ஆவன செய்ய வேண்டும்" என்று இன்னொரு தலையங்கமும் எழுதினார் பெரியார்.

தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் 42 தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டோடு கொளுத்திச் சாம்பலாக்கிய கறைபடிந்த வரலாறு, 24.12.68 அன்று எப்படியோ நிகழ்ந்து, அண்ணாவின் உடல் நலத்தை மேலும் குலைத்துவிட்டது. "இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை . இது ஜனநாயகத்தால், ஏற்பட்ட மிகப்பெரிய