பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

495


வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் எப்போதும் தமிழராகவே இருப்பார் என்பதில் நம்பிக்கை உண்டு.” 18ந் தேதி விருதுநகரில் காமராஜரின் அன்னை சிவகாமி அம்மையார் மரணம் அடைந்தார். அண்ணா அனுதாபச் செய்தி அனுப்பினார். “விடுதலை” துணைத் தலையங்கம் தீட்டியது.

அண்ணாவின் உடல் நலம் நாள்தோறும் சீர்கேடு அடைந்து கொண்டே வந்தது. ஏ.கோவிந்தசாமி இருந்து வந்த திருவரங்கம் என்ற இல்லம், குளிர்சாதன வசதியுடன் திருத்தி அமைக்கப்பட்டது. அங்கு செல்ல விரும்பாமல் அண்ணா நுங்கம்பாக்கம் சொந்த வீட்டிலேயே இருந்தார். உணவு ஒரு பருக்கையும் உட் செல்லவில்லை, வேலூர் செல்ல ஏற்பாடுகள் நடந்தன. அண்ணா புறப்படுந் தறுவாயில் மறுத்துவிட்டார். உடனே டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் அடையாறு கான்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 20.1.1969 அன்று. சிங்க ஏறுபோல் விறுவிறுப்புடன் நடந்து சென்று, தமது அறையில் நுழைந்தார். மருத்துவ நிபுணர் குழு அமைக்கப் பட்டது. அமெரிக்க மருத்துவர் டாக்டர் மில்லர் அழைக்கப்பட்டார். (இரகசியமாக வைத்திருந்த இச்செய்தியைச் செழியனே அண்ணாவுக்குத் தெரியச் செய்துவிட்டார்) பம்பாயிலிருந்து டாக்டர் பேமாஸ்டர், டாக்டர் ஜகாவாலா வந்தனர், வேலூரிலிருந்தும் மருத்துவர்கள் வந்தனர். உணவுக் குழலில் பழைய நோயின் அறிகுறி மீண்டும் தென்படுவதாக அறிவித்தனர். அமெரிக்காவிலிருந்து மில்லருடன் டாக்டர் ஹென்ஸ்கேயும் வந்தார். 25ந் தேதி அறுவை நடந்தது. மறுநாள் முதல் ரேடியோக்கதிர் சிகிச்சை தொடங்கப்பட்டது.

22ந் தேதி காமராசரும், 24ந் தேதி இரவு 10.30 மணிக்குப் பெரியாரும் வந்து பார்த்தனர். 27ந்தேதி அமெரிக்க டாக்டர்கள் திரும்பிச் சென்றனர்.

1969 மார்ச் 1, 2 தேதிகளில் சேலத்தில் இழிவு நீக்கக் கிளர்ச்சி மாநாடு நடத்தப் போவதாகப் பெரியார் 26.1.69 அன்று அறிவித்தார். “இது விளம்பர மாநாடல்ல; இரண்டில் ஒன்று பார்த்துவிடும் மாநாடு. 5,000 பேராவது சிறை செல்லத் தயாராக வேண்டும். 4,5 இடங்களில் தொடர்ந்து 100 நாள் 150 நாள் நடத்தப்பட வேண்டும். தோழர்கள் நன்கொடையாகப் பணம், அரிசி, கருப்புத்துணி ஆகியவற்றை அனுப்பி உதவுங்கள்” என்று எழுதிய பெரியார், அடுத்து, அண்ணாவின் உடல் நிலை மோசமானது கேட்டு, மாநாட்டை ஒத்திவைத்துவிட்டுச் சேலத்திலிருந்து 30ந் தேதி சென்னைக்கு விரைந்தார்!