பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளில் மக்கள் கூட்டம் வானொலிப் பெட்டிகளுக்கு முன்பாகக் குவிந்து கிடந்தது. சென்னை அடையாறுப் பகுதியில் சாலைகளிலும் தெருக்களிலும், இரவும் பகலும், நகர இடமின்றி, வெள்ளம் போல் தமிழர் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். அன்றாடம் அண்ணாவின் உடல் நிலை பற்றி மன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. 28ந் தேதி முதல்வரின் இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 29 காலை 11 மணிக்குத் திடீரென்று நெஞ்சைக் குலுக்கும் ஒரு செய்தி! சட்ட மன்றம் ஒத்திவைக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்கள் அடையாறு நோக்கிப் பறந்தனர்! காமராஜர், சி.சுப்ரமணியம், சம்பத் ஆகியோரும் வந்தனர். ஈசல் கூட்டமென மக்கள் வெருண்டோடி வந்தனர். செய்தி வதந்தியென அறிந்ததும், அனைவருடைய முகத்திலும் நிம்மதி படர்ந்தது. 30ந் தேதி சிறிது அபிவிருத்தி என்றனர். அண்ணா படுக்கையிலிருந்த படியே கார்ட்டூன் படங்கள் வரைந்து கொண்டிருந்தார்.

பெரியார் அடையாறுப் பகுதியிலேயே, வீரமணியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு, நாள்தோறும் கவலை தேங்கிய முகத்துடன் வந்து போனார். 31.1.69 கவலைக்கிடம் நீடிக்கிறது. 1.2.1969 நம்பிக்கை தென்படுகிறது. 2.2.69 டாக்டர்கள் போராடி வருகின்றனர். காலை முதல் மருத்துவமனையிலிருந்த பெரியார், வீரமணியின் இல்லம் சென்றார்; நள்ளிரவில் !

அதே நள்ளிரவு!

மணி 12-40. அந்தோ ! பேரிடி, பூகம்பம், பிரளயம்! என்.எஸ். சம்பந்தம் பெரியாரை அழைத்து, அண்ணாவின் மறைவு குறித்துச் சொன்னார். திடுக்கிட்டெழுந்து பெரியார் தம் வலது கையால் ஓங்கிச் சுவரில் அறைந்து அறைந்து, “போச்சு போச்சு. 'எல்லாம் போச்சு!” என்று கதறினார். உடனே மணியம்மையாருடன் வேனில் ஏறிப் புறப்பட்டு, அடையாறு மருத்துவமனை சேர்ந்தனர். அண்ணாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற, எடுத்து வந்தனர். தந்தை தனயனை வெறிச்சென்று பார்த்தார். “அய்யா நாங்கள் அநாதையாகிவிட்டோமே!" என்று கலைஞர் பெரியாரைக் கட்டிக்கொண்டு அழுதார். ஏ.கோவிந்தசாமியும் அலறித் துடித்தழுதார். மக்கள் வெள்ளம் கண்ணீர் வெள்ளத்தில் மறைந்தது!

3ந் தேதி காலை 11 மணியளவில் கையில் ஒரு மலர் வளையத்துடன் பெரியார், அண்ணாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்துக்குள் செல்ல முனைந்தார். அன்று சென்னை மாநகரத்தில் காணப்பட்ட ஈடு இணையில்லாச் சோகச் சூழ்நிலையில்