பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

497


அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. எனவே மலர் வளையத்தை ராஜாராமிடம் தந்துவிட்டுப் பெரியார் திரும்பிச் செல்ல நேரிட்டது.

"நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய, பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவம் ஆகும்" - என்று உடனடிச் செய்தியாகப், பெரியாரால் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது! 3.2.69 "விடுதலை" யில் “அண்ணாவின் முடிவு" என்று பெரியாரின் தலையங்கம் வெளியாயிற்று "இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்தி விட்டார். இந்த முடிவு தமிழ் நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல், இந்தியாவிலுள்ள மக்களை மாத்திரமல்லாமல், உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.

அண்ணாவுக்குச் செய்த வைத்திய சிகிச்சை உலகத்தில் உள்ள வேறெவருக்கும் செய்திருக்க முடியாது. டாக்டர் சதாசிவம் தலைமையில் அமைந்த குழுவினரும், மற்றும் வேலூர் டாக்டர்கள் டாக்டர் ஜான்சனும் டாக்டர் பதம்சிங்கும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.

அண்ணாவின் மறைவு தமிழ் நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ் நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றம் அடையக் காத்திருந்தது. நான் இந்த மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்து விட்டேன் என்று அண்ணா சொன்னதை - பெரியாரின் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.

நாட்டில் எல்லாக் கட்சியாருடனும், எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும், நேசமாகவும் இருந்து வந்தார். அண்ணாவின் குணம் மிக தாட்சண்ய சுபாவமுடையது. யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும், முடியாது என்று சொல்லத் தயங்குவார்.

காங்கிரஸ் ஸ்தாபனம் என்பது அதிகார சக்தி கொண்ட ஸ்தாபனமாகும். அண்ணாவின் முன்னேற்றக் கழக ஸ்தாபனமானது. அதிகார சக்தி இல்லாதது என்பதோடு, அன்பினாலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நட்பு நிலை ஸ்தாபனமாகும். இதற்கு உதாரணம் என்னவென்றால், தி.மு.க.வில் ஏமாற்றமடைந்த எத்தனையோ பேர் (சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், சி.பா.ஆதித்தனார், ம.பொ. சிவஞானம், எட்மண்ட் பெர்னாண்டோ , இரா. இளம்வழுதி, பெ.சீனிவாசன், ஆகிய அமைச்சுப் பதவி