பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வேட்பாளர்களைப் பெரியார் குறிப்பிடுகிறார்) இருந்தாலும் கழகத்திற்குள் ஒரு பூசலோ, தனிப்பிரிவோ, கருத்து வேற்றுமைக் கோஷ்டியோ இல்லாமல், ஒரு குடும்பம் போலவே வாழ்ந்து வருகின்றார்கள் என்றால், இதற்கு அண்ணா நடந்து கொள்ளும் தன்மையேதான் காரணமாகும்.

நான், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறும் வரை, அக்கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்க பெருந்தன்மையுடன், நட்புக் கொள்ள ஆசைப்பட்டு, என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன், நண்பராகவே நடத்தினார்.

இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது, தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும். மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணாவின் புகழ், மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லாரும் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு, எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்!

இனியும் அவர் புகழ் ஓங்கவேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும். தி.மு.க. தோழர்களையும் நான் எனது தி.க. தோழர்களைப் போலவே கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன். பொது மக்கள் எல்லாருமே ஒத்துழைத்து, மக்களுக்கு வேண்டிய நலன்களைப் பெறப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

மறுநாள் வானொலியில் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். “அண்ணா முடிவெய்தி விட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையே ஆகும். அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமே ஆகும். என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சிநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்று விட்டார்!

யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்கக் கொண்டாட்டத்தில் 4-ல், 8-ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி, கிடையவே கிடையாது!

அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால்