பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

499


தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார். எனவே, அண்ணாவின் நற்குண, நற்செய்கை, பெருமைக்கு, இதற்கு மேல் எடுத்துக்காட்டு, காட்ட முடியாது.

இன்றும் மக்களுக்கு உள்ள கவலை எல்லாம், நானறிந்த வரை, அண்ணா முடிவடைந்து விட்டாரே; இனி ஆட்சி எப்படியிருக்குமோ? என்பதுதான்! நான் சொல்லுவேன். 'அண்ணா இறந்து விட்டார்; அண்ணா வாழ்க!" என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும், திருப்பமும் இல்லாமல், அவரது கொள்கை வளர்ந்து, ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத், தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழி காட்டியாக வைத்துக்கொண்டு, அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகின்றேன். இயற்கையும் அவர்களை அந்தப்படியே நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்,

தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் அன்பு காட்டிப் பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்." 4.2.69 இரவு 8 மணிக்கு இது ஒலிபரப்பாகிறது. மக்கள் கூட்டம் 15 லட்சம் பேர் என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா இயற்கை எய்தியவுடனே, நுங்கம்பாக்கம் இல்லத்துக்குச் சடலம் கொண்டு செல்லப்பட்டது. கூட்டம் சமாளிக்க முடியாமல் போகவே, விடியற் காலையில் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் இறுதி மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர், அரசு சம்பிரதாயப்படி நாவலரைத் தற்காலிக முதல்வராக நியமித்து, அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இரவிலேயே ஆளுநர் மாளிகையில் 1.15 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சர்தார் உஜ்ஜல் சிங், அவரது துணைவியார் இருவருமே அண்ணாவிடம் அளவிடற்கரிய அன்பும் மரியாதையும் காட்டி வந்தவர்கள்!

அண்ணாவை ஒருமுறை கண்டுவிட வேண்டுமென்ற ஆர்வமேலீட்டால், தமிழகமே, கிடைக்கின்ற வாகனங்களிலெல்லாம் ஏறிச் சென்னை நோக்கித் திரண்டது. மாநகரின் மக்களிலே 95 சதவீதம் பேராவது, நேரில் கண்டு செல்ல வந்தனர். இந்திய வரலாற்றிலேயே யாருடைய மறைவுக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதுமில்லை; திரண்டவர் அனைவருமே கதறி அழுததுமில்லை; இதற்கு முன்னும்,