பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

501



நான் கண்ட மிகப் பெரிய கூட்டம், ரஷ்யாவில் Red Square (ரெட்ஸ்கொயர்) செஞ்சதுக்கம் என்னும் இடத்தில் மேதினம் கொண்டாடுவதற்காகக் கூடும் 10 லட்சம் மக்களின் உணர்ச்சி மிகுந்த கட்டம். ஆனால் இங்கேயோ அடைவிட மூன்று மடங்கு கூட்டம்; துக்கமும் சோகமும் துயரமும் அழுகையும் கூக்குரலும் கொண்ட மக்கள் கூட்டம்!

இராஜாஜி வந்திருப்பதாகப் பொய் சொல்லி, இந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் தம் புத்தியைக் காட்டத் தவறவில்லை. அண்ணா மறைவு, தமிழர் சமுதாயத்துக்கு மாபெரும் நட்டம் என்பதும், சங்கடமான நிலையை உண்டாக்கி விட்டது என்பதும் உண்மையே! அண்ணா இல்லாத மந்திரி சபைக்குப் புதிய கருத்தோ, புதிய கொள்கையோ, புதிய மந்திரிகளோ கூடத் தேவையில்லை. வேண்டியதெல்லாம் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமையேயாகும்.

இன்றைய ஆட்சி வெறும் தி.மு.க. ஆட்சி அல்ல. தமிழர்கள் ஆட்சி, தமிழர்களின் நலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி. ஆகவே இந்த நேரத்தில் கடமை கண்ணியம் என்பதைவிடக், கட்டுப்பாடே முக்கியமானதாகும்."

7ந் தேதி “விடுதலை" யில் “முதல் மந்திரி தேர்தல்" என்ற தலைப்பிட்ட பெட்டிச் செய்தி ஒன்று, பெரியாரால் தரப்பட்டது. "முதல் மந்திரி தேர்தல், வரும் 9ந் தேதியன்று நடைபெற இருப்பதாகச் சேதி வந்தது. மிக்க மகிழ்ச்சி! எவ்வளவு சீக்கிரம் தலைவர் தேர்தல் நடைபெறுகிறதோ, அவ்வளவுக்கு நன்மை அதிகம். எனக்கு இன்றுள்ள இந்த எட்டு மந்திரிகளில் யார் முதல் மந்திரியாக வந்தால் தேவலாம் என்ற சிந்தனைகூடக் கிடையாது. பிளவும், கருத்து வேற்றுமையும் இல்லாமல் தேர்தல் முடிவு இருக்க வேண்டும். வளைய முடியாத கல்தூணில் பிளவு ஏற்பட்டால், பிறகு அபாயத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்." அன்றையத் தலையங்கமும் பெரியாருடையதே; “புதிய மந்திரிகள் தேவையில்லை " என்பது தலைப்பு. “இதைப் பற்றிப் பல தடவை எழுதியிருக்கிறேன். மீண்டும் ஓரிருவர்க்கு மந்திரி பதவி தந்தால், பதவி கிடைக்காத மற்றவர் பூசல் உண்டாக்கக்கூடும். யாருடைய யோசனையும் கேட்டு, Coalition Government கூட்டு மந்திரி சபை அமைக்கும் எண்ணமும் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். முதலில் நெருக்கடியிலிருந்து தப்பி, நம்மை நிலை நிறுத்திக்கொண்டு, பிறகே மற்றவைகளைப் பற்றிச் சிந்திப்பது நல்லது" என்பதாக எழுதிக் காட்டினார்.

9ந் தேதியன்று பெரியார் நாகப்பட்டினம் சென்றிருந்தார். அன்று காலை சென்னையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தபோது, கலைஞரின் பெயர் தலைவருக்காக முன் மொழிந்து; வழி மொழியப்பட்டது. நாவலரின் பெயரை எஸ்.ஜே. ராமசாமி முன்