பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மொழிய, வி.டி., அண்ணாமலை ஆதரித்தார். வேறு யாரும் ஆதரிக்காத நிலையில், நாவலர், தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தவர், உள்ளேயிருக்காமல் வெளியேறினார். பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, தாம் அமைச்சரவையில் இருக்கப் போவதில்லை எனவும், வெளியிலிருந்து கழக வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில் அவர் பிடிவாதமாயிருந்ததால், மீதமுள்ள 7பேர் கொண்ட கலைஞரின் அமைச்சரவை 10. 2. 69 மாலை 3.30 மணிக்குப் பதவி ஏற்றது. அமைச்சர்கள் நேரே கோட்டைக்குச் சென்று, தமது அறைகளில் அமர்ந்து, சில ஃபைல்களில் கையெழுத்திட்ட பின்னர், அடையாறு வீரமணி இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரைச் சந்திக்கச் சென்றனர். கலைஞர் பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டினார். பெரியார் "நேற்று நான் நாகையில் இருந்தேன். உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதாகக் கூறி, எல்லாருமே வரவேற்றார்கள். என் ஆதரவும் ஒத்துழைப்பும், எப்போதும் உண்டு" என்றார்.

10, 11 இரண்டு நாட்களும் “விடுதலை" பெரியாரின் தலையங்கம் தாங்கி வந்தது. முதல் நாள் “வரவேற்க வேண்டியதும் வருந்த வேண்டியதுமான நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில்; “தி.மு.க வுக்கு இந்த நிலையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற வருக்குத் தேவையானது, தகுதி திறமை மாத்திரமல்ல, கட்சியைத் திறமையுடன் பாதுகாக்கும் திறமையும் தேவைப்படுகிறது. கலைஞர் அவர்கள் கட்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பதை எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள். கலைஞருக்குக் கட்சி உறுப்பினர்களிடத்திலும், சட்ட சபை உறுப்பினர்களிடமும் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. நாவலர், மந்திரி சபையிலிருந்து விலகிக் கொள்வதானது, மிகவும் வருந்த வேண்டிய விஷயமாக இருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில், நாவலரும், மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்க வேண்டும், என்பதோடு 2, 3 ஆண்டுகளுக்கு முன் இராஜாஜி கூறிய ஆப்த வாக்கியத்தைக் கூறி இதை முடிக்கிறேன். 'எப்படிப்பட்ட பாதகமான காரியத்தைச் செய்தாவது, நம் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அது பாவமாகாது' என்பதுதான் அது."

அடுத்த நாள் தலைப்பு “ஊடல் ஒழிக!" என்பது. “தமிழ் நாட்டு ஆட்சியில் மந்திரி பதவிகள் என்பது கலைஞருக்கோ நாவலருக்கோ சொந்தமான பதவிகள் அல்ல. அது தமிழர் சொத்தாகும். நாவலரும் கலைஞரும் டிரஸ்டிகள் பாதுகாவலர்கள். நாவலர் அவர்கள் என்னதான் ஆயிரம் சமாதானம் சொன்னாலும், பதவி கிடைக்காததால் தான், இந்த ஊடல் ஏற்பட்டது என்பார்கள். நாம் நமது பரிதாபத்திற்குரிய தமிழர் நல சார்பாய்ச் சொல்கிறேன். இரண்டு